Sunday, December 23, 2007

வீணாவின் ஜாக்கெட்!

வீணா தணிகாச்சலம் வளர்ந்து வரும்(உயரத்தில் அல்ல) குறும்பட, விளம்பரப்பட இயக்குனர்,பெண் விடுதலை, ஒடுக்கபட்டோர்க்காக குரல் கொடுத்தல் எனப்புரட்சிகரமான சிந்தனை மட்டுமல்ல செயலும் கொண்டவள். ஆனால் பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு! முப்பதுகளின் துவக்கத்தில் இருந்தாலும் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் கொண்டவள்.

அன்று நகரத்திலேயே மிகப்புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்ந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள். அது அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் நம்மையும் அம்மாம் பெரிய கல்லூரியில் கூப்பிட்டு இருக்காங்களே என்று. பின்னே இருக்காதா இவளின் குரு நாதர் என்று அறியப்படுபம் புகழ்ப்பெற்ற திரைப்பட இயக்குநர் "வேலு ராஜேந்திராவும்", மற்றொரு புகழ் பெற்ற விளம்பரப்பட இயக்குனர் "விஜயன் பாலாவும்", "அமரன்"என்ற ஒரு பெரிய எழுத்தாளரும் அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் அனைவரும் ஆண்கள், ஏற்கனவே தங்கள் துறையில் முத்திரை பதித்தவர்கள்.இவள் மட்டுமே வளர்ந்து வரும் பெண் படைப்பாளி. அவர்களுக்கு சரிசமமாக ஒரு வாய்ப்பு என்பது பரவசம் அளிக்கும் ஒன்று தானே!

நேரத்தோடு போய் சேர்ந்து விட வேண்டும் என்று அவளது ஸ்கூட்டியை விரட்டிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள், வழக்கமாக எல்லா இடத்திலும் கேட்பது போன்று அங்கிருந்த செக்யூரிட்டி வாசலில் நிறுத்தி விசாரித்தான் , சற்றே கர்வத்துடன் , விழா அழைப்பிதழை எடுத்துக்காட்டி, நான் இங்கே நடக்கிற பங்ஷனில் சீப் கெஸ்ட்டாக கலந்துக்க வந்திருக்கேன் என்றாள்.

ஆனால் அந்த செக்யூரிட்டி கல்லுளி மங்கன் போல, சாரி ... உங்களை உள்ளேவிட முடியாது என்றான்.

-ஏன்?...
-உங்கள் ஜாக்கெட்....
-அதுக்கு என்ன? ....
-ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு இருக்கிங்க...

- அப்போது தான் உணர்ந்தாள் , வழக்கமாக அணியும் அவளது ஃபேவரைட் புளு கலர் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் , பின்க் கலர் காட்டன் புடவையில் அசத்தலாக வந்திருந்தால், அது அவளுக்கு பளிச்சென்று எடுப்பாகவும் இருக்கும்.

நான் வழக்கமாக இது போல உடை உடுத்திக்கொண்டு பல இடத்துக்கும் ,கல்லூரிக்கும் போய் இருக்கேன், அங்கே எல்லாம் என்னை யாரும் ஆட்சேபணை செய்யவில்லையே, இங்கே இது என்ன புது பழக்கம் எனக்கேட்டாள்.

மற்ற இடத்தில் எப்படியோ இங்கே டிரெஸ் கோட் இருக்கு,புடவைனா, கை வைத்த ஜாக்கெட், சுடிதார் என்றால் ,துப்பட்டா என்று பெண்கள் அணிய வேண்டும், அப்படி உடை அணிந்தவர்கள் மட்டும் தான் கல்லூரிக்குள் வர முடியும்.இது பிரின்சிபாலின் உத்தரவு , நான் மீற முடியாது என்று சொல்லிவிட்டான் செக்யூரிட்டி.

அட கடங்கார பாவி என்று மனசுக்குள் சபித்தவாறு. பிரின்சிபாலைப்பார்க்கணும் என்றதுக்கு, அவர் இப்போ பங்ஷனில் பிசியாக இருப்பார், நீங்க உள்ள போகணும்னா போய் பக்கத்தில இருக்க ரெடிமேட் கடை எதுலவாச்சாம் வேற ஜாக்கெட் வாங்கி மாத்திக்கிட்டு வாங்க என்று சிரிக்காமல் சொன்னான்.

தன்மான பெண்ணாச்சே வீணா, அப்படிலாம் டிரெஸ் மாத்திக்கிட்டு இந்த விழாவில் நான் கலந்துக்கொள்ளவேண்டிய தேவையே இல்லை, வர்ரேன், ச்சே இனிமே இந்தப்பக்கமே வர மாட்டேன் என்று திரும்பியவள். போவதற்கும் முன்னர் இதனை அங்கு வந்திருக்கும் அவள் குருநாதர் காதுக்கு தெரியப்படுத்துவோம் அவர் கண்டிப்பாக கேள்வி கேட்பார் என்று நினைத்தாள், ஆனால் அவர் செல் போன் பயன்படுத்துவதே இல்லை,அப்படி ஒரு கொள்கை அவருக்கு.

நல்ல வேளை இன்னொரு விளம்பர பட இயக்குனரான விஜயன் பாலாவின் நம்பர் இருந்தது. அதில் அழைத்து அவனிடம் விபரம் சொன்னாள். அவனோடு நல்லப்பழக்கமும் உண்டு .அவனும் சரி .. சரி என்று கேட்டுக்கொண்டான்.கண்டிப்பாக தகவல் போய் மேடையில் வைத்தே இதை கேள்விக்கேட்டு ஒரு பிரச்சினை ஆக்கி விடுவார் தனது குருநாதர் என்ற நம்பிக்கையுடன் வீணா விர்ரென கிளம்பினாள்.

விஜயன் பாலா போனை துண்டித்துவிட்டு , ... ஆமாம் இவள் வந்திருந்தா, நாம என்ன பேசினாலும் எவனும் கவனிக்க மாட்டான்,அவள் அலங்காரத்தையும் அவளையும் பார்த்துக்கிட்டு அவள் பேசுறதுக்கு மட்டும் யாருமே சொல்லாததை சொன்னாப்போல கை தட்டி ரசிப்பாங்க, பொம்பள பேசினா மவுசு தானே. இனிமே நிம்மதியாக நாம மட்டும் "நச்சுனு" பேசி அசத்திடலாம் ,என்று நினைத்தவாறே, பக்கத்தில் இருந்த வீணாவின் குருநாதரிடம் பாத்ரூம் எங்கே இருக்கு என்று கேட்டு விட்டு சாவகாசமாக ஒரு லேட்டஸ் பாடலை முனுமுனுத்தபடி பாத்ரூம் கிளம்பினான்.

செக்யூரிட்டியை அழைத்த பிரின்சிபல் நான் சொன்னாப்போல சொல்லி வீணாவை திருப்பிட்டியா , தாங்க்ஸ் என்று 100 ரூபாய் எடுத்துக்கொடுத்து விட்டு..... எஞ்சினியரிங்க் படிச்சுகிட்டு இருந்த என் பொண்ணை விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி,மனச மாத்தி அரை குறை உடைல டீவி விளம்பரத்தில நடிக்க வச்சிட்டு, இப்போ அவள் எப்போதும் அரை குறை டிரெஸ் போட்டுக்கிட்டு அலையறா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, பெண்கள் உடை விஷயத்தில் கவனமா இருக்கனும் என்பதும் டிரெஸ் எப்படி போடனும் என்பதும் இனிமே உனக்கும் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கும் வீணா! என்று மனதுக்குள் சொல்லி திருப்தியுடன் சிரித்துக்கொண்டே விழாவுக்கு போனார்.
------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-
இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே, ஏதேனும் பெயரையோ,உண்மை சம்பவத்தை நினைவூட்டினால் அது தற்செயலே!

இக்கதை சர்வேசனின் நச்சு "கதைப்போட்டிக்காக"