Thursday, February 21, 2008

sensex- ஒரு பார்வை!

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது என்னைப்போல சும்மா வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை sensex அப்படி என்றால் என்ன? , sensitive index என்பதன் சுருக்கமே sensex, இதனை வைத்து எப்படி பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள், இந்த முறை எப்போது இருந்து நடைமுறைக்கு வந்தது என்பதைப்பார்ப்போம்.

கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே முதலீட்டு பங்காக போட்டு ஒரு வியாபார அமைப்பாக நிறுவியது தான் இன்றைய மும்பை பங்குவர்த்தக மையம்.அபோதேல்லாம் எந்தவித குறியீடுகளும் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் பங்கு வணிகம் நடந்தது. 1986 இல் தான் முதன் முதலில் sensex என்ற பங்குவணிக குறியீட்டினை செயல்படுத்தி , சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக உணர செய்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் sensex புதிதாக வெளியிடப்படும்.

இந்த sensex எதன் அடிப்படையில் செயல்படுகிறது?

முதலில் முழு சந்தைமதிப்பு முதலீடு (
"Full Market Capitalization")என்ற அடிப்படையிலும் , பின்னர் 2003 இல் இருந்து கட்டற்ற மாறும் சந்தை மதிப்பு முதலீடு ("Free-float Market Capitalization" )என்ற அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

முழு சந்தைமதிப்பு முதலீடு:

உதாரணமாக ஒரு நிறுவனம் 1000 சமவிகித பங்குகளை தலா 100 ரூபாய் மதிப்பில் வைத்து துவக்கப்படுகிறது என்றால் , அதன் மொத்த மதிப்பு 100x1000= 1,00,000 ஆகும், இந்த மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது முழு சந்தை மதிப்பு முதலீடு ஆகும்.

இதில் உள்ள குறைப்பாடு என்னவெனில், அந்நிறுவனத்தின் உண்மை சந்தை மதிப்பு என்ன என்பதை சரியாக கணக்கிட முடியாது, ஏன் என்பதை அடுத்த உதாரணம் பார்க்கும் போது தெரியும்.

கட்டற்ற மாறும் சந்தை முதலீடு:

அதே நிறுவனத்தின் 1000 பங்குகளில் 250 பங்குகளை அதன் முதலாளி தனக்காக வைத்துக்கொண்டு 750 பங்குகளை மட்டுமே மக்கள் வாங்க சந்தையில் விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், மக்களுக்கு கிடைக்கும் பங்குகளின் மதிப்பு என்ன 750x100= 75,000 தான். இப்போது மக்கள் பங்கு பெறும் பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடும் போது விற்பனைக்கு வராத 250 பங்குகளையும் சேர்த்து மதிப்பிட்டு சொல்வதால் என்ன ஆகும், தேவை இல்லாமல் மதிப்பைக்கூட்டிக்காட்டும், ஆனால் புழக்கத்தில் உள்ள பங்கு மதிப்பு குறைவு, அதன் விற்பனை செயல்ப்பாடுகளே நேரடியாக supply & demand அடிப்படையில் சந்தையின் மதிப்பை வெளிப்படுத்தும்.

எனவே தான் தற்போது எல்லாம் உலக அளவில் அனைத்து பங்கு சந்தைகளும் கட்டற்ற மாறும் சந்தை முதலீடு அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது நம் பங்கு சந்தை குறியீட்டு எண் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

இக்குறியீட்டினை ஏதோ ஒரு ஆண்டினை அடிப்படை ஆண்டாக (base year)வைத்து துவக்க வேண்டும், நமக்கு 1979 தான் பங்கு சந்தை குறியீட்டு அடிப்படை ஆண்டு.

அந்த ஆண்டில் தோராயமாக 10 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்தது என்று வைத்துக்கொள்வோம், இதுவே அடிப்படை பங்குகள் எனப்படும், அதன் மொத்த மதிப்பு 1000 ரூபாய் , என்றால் அதனை வைத்து குறியீடு ஏற்படுத்தி முழு மதிப்பாக வைத்து குறியீட்டு எண் 100 என்று நிர்ணயித்துக்கொண்டார்கள்.

அதாவது 1979 இல் sensex மதிப்பு 100 என்று துவக்கமதிப்பாக நிர்ணயித்துக்கொண்டார்கள்.

இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் , புதிதாக எத்தனை நிறுவனங்கள் பங்கு வெளியிட்டாலும் அதனை முதலில் அந்த அடிப்படை பங்குகளின் செயல் பாட்டுடன் ஒப்பிட்டே மொத்த சந்தையினை மதிப்பிடுவர்கள். பங்குகளின் மொத்த மதிப்பினை, துவக்க பங்கு மதிப்புக்கும் , துவக்க பங்கு குறியீட்டுக்கும் உள்ள விகிதத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணுக்கு தான் sensex என்று பெயர்.

1979 இல் ஒரு உதாரணமாக 10 நிறுவனங்களை எடுத்துக்கொண்டார்கள் என்று சொன்னேன், ஆனால் உண்மையில் 30 நிறுவனப்பங்குகள் எடுத்துக்கொண்டார்கள், அதன் மொத்தமதிப்பாக 60,000 ரூபாய் என்றும், அதன் ஆரம்ப குறியீடாக 100 என்றும் வைத்துக்கொண்டார்கள்.

இப்பொழுது sensex கணக்கிட அந்த 30 பங்குகளின் சந்தை மதிப்பை, சந்தையில் கிடைக்கும் விற்பனைக்கு கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடுவார்கள், அப்படி கிடைக்கும் மதிப்பினை 100/60,000 என்ற எண்ணால் பெருக்குவார்கள் , (இந்த விகிதத்திற்கு index divisor என்று பெயர்) அப்படி பெருக்கி கிடைக்கும் எண்ணே அப்போதைய sensex.

30 அடிப்படை நிறுவனங்களை பெரிய , நடுத்தர , மிக நீண்டக்காலமாக இருக்கிற , நம்பிக்கையான , அதிகம் வியாபாரம் ஆகும் பங்குகள் என்று பல அளவுகோள்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்வார்கள்.

தற்போதைய பங்கு சந்தை sensex அடிப்படை 30 பங்கு நிறுவனங்கள் இவை தான்,

ACC, Ambuja Cements, Bajaj Auto , BHEL, Bharti Airtel , Cipla, DLF, Grasim Industries , HDFC , HDFC Bank, Hindalco Industries , Hindustan Lever , ICICI Bank , Infosys , ITC, Larsen & Toubro, Mahindra & Mahindra, Maruti Udyog , NTPC, ONGC , Ranbaxy Laboratories , Reliance Communications , Reliance Energy , Reliance Industries , Satyam Computer Services , State Bank of India , Tata Consultancy Services , Tata Motors , Tata Steel , and Wipro .

இந்த 30 நிறுவனங்களின் செயல்ப்பாடு, வர்த்தகம் , அதன் மதிப்பே sensex ஐ நிர்ணயிப்பது.

பின்னர் எப்படி திடீர் , திடீர் என பங்கு சந்தையில் சரிவு ஏற்படுகிறது, இந்த 30 நிறுவனங்களும் எப்போதும் லாபத்தில் இருக்குமே எனலாம், அதுக்குலாம் மேலும் பல காரணங்கள் இருக்கு , பின்னர் பார்க்கலாம்,அல்லது பின்னூட்டங்களில் யாரேனும் சொல்லக்கூடும்!