Tuesday, March 18, 2008

ville noire -அடிமை சின்னம்!

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியின் வரலாற்றினை தற்செயலாகப் மீண்டும் படிக்க நேரிட்டது அதில் இருந்து சில ஆர்வம் தூண்டும் செய்திகளும் நெருடலான சில உண்மைகளும் எனக்கு புலப்பட்டது.

இதிகாச காலத்தில் அகத்தியர் தான் புதுவையை உருவாக்கியவராம் , இங்கே ரோமானியர்கள் எல்லாம் வந்து யாவாரம் செய்துள்ளார்கள். பின்னர் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு , விஜயநகர மன்னர்கள் வசம் வந்து , அதன் பின்னர் ஆர்காட் நவாப் வசம் வந்து சிறிது காலம் இருந்துள்ளது.

நாடு பிடிக்கும் ஆசையில் பல அய்ரோப்பிய நாடுகளும் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிய காலத்தில் இந்திய கரையோரம் ஒதுங்கி பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியினரை புதுவை பகுதியை வளைத்துப்போட்டார்கள் 1673 இல், 1693 இல் டச் காரர்கள் சண்டைப்போட்டு புதுவையை பிடித்தார்கள் பின்னர் ரிஸ்விக் ஒப்பந்தம்மூலம் மீண்டும் 1699 இல் பிரஞ்ச் வசம் வந்தது.

அதன் பின்னர் நடந்த ஆங்கில - பிரஞ்ச் சண்டைகளின் போது அடிக்கடி கை மாறி இருக்கு. கடைசியாக பிரஞ்ச் கம்பெனி வசமே வந்து சேர்ந்தது.பிரஞ்ச் ஆண்ட போது புதுவையில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு வச்ச பேரு தான் "ville noire" அப்படினா கருப்பு நகரமாம், பிரஞ்ச் காரங்க வசித்த பகுதிக்கு"ville blanche" வெள்ளை நகரமாம்.

இந்திய சுதந்திரப்போர் நடைப்பெற்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப்போன பிறகும் புதுவை பிரன்ச் காலனியாகவே இருந்தது. அப்போதைய இந்திய தலைவர்களும் புதுவை சரியாக்கண்டுக்கலை போல.

அதன் பிறகு தனியா ஒரு புதுவை சுதந்திர போராட்டம் நடத்தி பிரஞ்ச் காரங்களும் புதுவையை சுதந்திர இந்தியாவுடன் சேர்த்து வைத்துவிட்டு கிளம்ப 1954 இல் தான் தயாரானார்கள் . அப்போ சுதந்திரம் அடைந்தாலும் 1963 வரைக்கும் முழுமையா சுதந்திரம் அடையாம இழுத்துக்கிட்டே போய் இருக்கு.

1963 இல் தான் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது, அதுவரைக்கும் பிரஞ்ச் அரசிடம் வேலைப்பார்த்த இந்தியர்களுக்கு என்ன தான் கருப்பர்கள், அடிமைகள்னு பிரஞ்ச் எஜமான்கள் சொன்னாலும் அவங்களை நாட்டை விட்டு போக சொல்ல மனசே வரலை. நீங்க போனா நாங்களும் உங்க கூடவே வந்திடுறோம்னு ரொம்ப ராஜ விசுவாசம் காட்டி இருக்காங்க, அப்படிக்காட்டினவங்க எண்ணிக்கை ஒரு 10,000 சொச்சம் இருக்கும். ஒரு பக்கம் பல ஆயிரம் பேர் உயிரைக்கொடுத்து பிரஞ்ச் அரசை துறத்த போராடினால் இப்படியும் ஒரு கூட்டம் அங்கே இருந்து இருக்கு.

ஏகாதிபத்திய சக்தியா இருந்தாலும் , தன்னோட அடிமைகள் மேல அக்கரைக்கொண்ட அரசா பிரஞ்ச் அரசாங்கம், எங்கக்கிட்டே சேவகம் பார்த்தவர்கள் யார் யார் எல்லாம் பிரஞ்ச் குடியுரிமை வேணுமோ அவங்களை எல்லாம் எங்க நாட்டுக்காரங்களா அங்கிகரிக்கணும்னு இந்திய அரசாங்கத்தோட ஒரு கேவலமான ஒப்பந்தம் போட்டார்கள், அதன் படி ஒரு 10,000 பேரு பிரஞ்ச் நாட்டுக்குடியுரிமை வாங்கிட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார்கள், அதிலும் சில மானஸ்தர்கள் இருந்து இருக்காங்க எங்களுக்கு பிரஞ்ச் குடியுரிமை வேண்டாம்னு சொல்லி இருக்காங்க, அது சில 100 பேர்கள் தான்.

பிரஞ்ச் குடியுரிமை பெற்றவர்களுக்கு அப்போவே ஒரு வசதி செய்து தரப்பட்டிருந்தது , விருப்பப்படும் வரைக்கும் இந்தியாவில் இருந்துக்கொள்ளலாம் தேவைப்படும் போது பிரான்ஸுக்கு போய்க்கொள்ளலாம்.இங்கே இருக்கும் முன்னாள் காலனி இந்தியாவை சேர்ந்த பிரஞ்ச் சேவகம் செய்தவர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் பிரஞ்ச் அரசு வழங்கும்.அந்தஓய்வூதியத்தை வாங்கிட்டு இங்கேவே சொகுசா அவர்கள் வாழ்ந்தார்கள். இங்கேயே கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு படிப்பெல்லாம் முடித்துக்கொண்டு பிறகு நேரா பிரான்ஸுக்கு போய் அங்கே வேலை கேட்டு வாங்கிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஏன் அப்படி செய்றாங்கனா பிரான்ஸில் ஒரு சட்டம் இருக்கு அனைவருக்கும் அரசு கண்டிப்பா வேலை தரணும் , அதனால் பெரும்பாலும் கட்டாய ராணுவ சேவைனு சில ஆண்டுகள் வேலை தந்துடுவாங்க, பிறகு நல்ல வேலைக்கு அரசே ஏற்பாடு செய்யும். வேலைக்கிடைக்கவில்லை எனில் அது வரைக்கும் உதவி தொகை தரும்.

இதை எல்லாம் படித்த போது எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்தியா விடுதலை அடைந்தபோது இப்படி ஏன் ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை தரவில்லை. இல்லை மக்கள் கேட்கலையா ?

மேலும் நாட்டை விட்டுப்போ என்று போராடி தொறத்திட்டி எப்படி எனக்கு குடியுரிமை குடுனு புதுவை ஆட்கள் வெட்கம் இல்லாமல் கேட்டாங்க?

எனக்கு என்ன தோன்றுகிறதுனா , ஆங்கிலேயர்கள் போனபிறகு சில ஆண்டுகள் கழித்து தான் பிரஞ்ச் விடுதலை கிடைத்தது. அப்போ சுதந்திர இந்தியாவில் முன்னாள் ஆங்கில அரசு ஊழியர்களுக்கு கிடைத்த சம்பளத்தை பார்த்து இருப்பாங்க , புதுவையில் வாங்குவதை விட ரொம்ப கம்மியா இருந்து இருக்கும், ஆஹா இந்த வேலையை விட்டா காசு தேறாதுனு , நீங்க போனாலும் நாங்க உங்க குடிமக்களா இருக்கப்பிரியப்படுறோம்னு சொல்லி காரியம் சாதித்துக்கொண்டார்கள் போலும்.

இந்தியர்கள்னு சொல்லிக்கிறதை விட காசு பெருசா போய் இருக்கு அந்த சில மக்களுக்கு மட்டும், அப்படி பணத்திற்காக நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் வழி வந்த வாரிசுகள் இப்போவும் பிரான்சில் நாம் இன்னும் காலனி ஆதிக்க சின்னத்தை துறக்காமல் சுமந்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் தமிழனோ , தமிழச்சியோ தங்கள் இழிவு நீங்க காலனி ஆதிக்க அடிமை சின்னத்தை துறக்க வேண்டாமா?