Wednesday, November 23, 2011

அறிவியல் தேசம் இந்தியா!





அறிவியல் தேசம் இந்தியா!


இந்தியா பல சிறப்புகளை உடைய ஒரு தேசம் , உலகத்திற்கே முன்னோடியான நம் நாடு இன்று அணு சக்தி முதல் இன்ன பிற தொழில்நுட்பங்களுக்காக அயல்நாட்டிடம் பரிதாபமாக கையேந்தி நிற்கிறது.அந்த காலத்தில் வெற்றிலையில் மை தடவி " LED tv " க்ளை விட சிறப்பாக தொலைக்காட்சிகளை கொண்டு வந்த விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள். ஆனால் இன்றோ எல்லாம் அன்னிய மயமாகி விட்டது. காரணம் நாம் நம் திறமை மீது நம்பிக்கை வைக்காததும், பழம் பெருமைகளை மறந்து விட்டதுமே ஆகும், போதி தர்மனை எல்லாம் மறந்தூ விட்டோம்.

ஏஆர்.முருகதாஸ் மட்டும் இல்லை என்றால் நம்மில் எத்தனைப்பேருக்கு போதி தர்மனை தெரிந்து இருக்கும்.
எனவே  நமது கலாச்சார விஞ்ஞான வேர்களை அடையாளம் காட்டவே இப்பதிவு.

# முதல் கண் தானம், மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்தது இந்தியாவில் தான், கண்ணப்ப நாயனார், கேடராக்ட் வந்த சிவனுக்கு தனது கண்ணை தானமாக கொடுத்து , அவரே அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

#பயோ டெக்னாலஜியை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, பாலை உறையூற்றி தயிராக ஆக்கினர், அந்த தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்துள்ளனர்,ஆதாரம் கிருஷ்ணர் வெண்ணை திருடி தின்றதே.

# திசு வளர்ப்பு, குளோனிங் ஆகியவற்றை கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே, காந்தாரிக்கு சிசு பிறக்காமல் ஒரு திசுவாக பிறந்தது அதனை 101 துண்டுகளாக்கி 101 கலசங்களில் இட்டு குழந்தைகளாக மாற்றினார் துர்வாசர் , அவர்களே கவுரவர்கள். கவுரகர்களின் ஒரே தங்கை துசாலை தான் 101 வது உடன்பிறப்பு.

#ஒரு மிகப்பெரும் நிகழ்வினை நேரடி வர்ணனையாக சொல்லும் ரன்னிங் கமெண்டரி கொடுக்கும் முறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்களே, மகாப்பாரத போரை களத்துக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே திருதராஷ்டிரனுக்கு லைவ் கமெண்டரி கொடுத்தார் விதுரர்.  சஞ்சயன் .இதை அடிப்படையாக வைத்தே பின்னாளில் வானொலி ,தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்கும் வழக்கம் வந்தது.

#முதன் முதலில் ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆக பணிப்புரிந்ததும் ஒரு இந்தியரே, மகாப்பாரதபோரில் பாண்டவர்கள் வெற்றி அடைய யார்க்காரணம் என தீர்ப்பு வழங்கியது , போரினை ஆரம்பம் முதல் கடைசிவரைப்பார்த்த பார்பரிக்கா என்பவரே(பீமனின் பேரன்,கடோத்கஜன் மகன்). இவரே உலகின் முதல் போர்ப்பார்வையாளர் ஆவார். இதன் பின்னரே மானாட மயிலாட போன்றவற்றில் கெமிஸ்ட்ரி பற்றிப்பேச ஆரம்பித்தார்கள் நீதிபதிகள்.

# உலகின் முதல் டிரான்ஸ்ஜெனிக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததும் இந்தியாவில் தான், சிவன் , யானை தலையை ,மனித உடலுக்கு பொருத்தி வினாயகரை உருவாக்கினார்.

#முதல் பறக்கும் எந்திரம் கண்டுப்பிடித்ததும் இந்தியாவில் தான் , இராவணன் புஷ்பக விமானம் வைத்திருந்தார், அவரே உலகின் முதல் பைலட் லைசென்ஸ் வாங்கியவர்.

#கொரில்லா தாக்குதல் எனப்படும் மறைந்து இருந்து தாக்கும் உத்தியைக்கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே ,இராமன் மறைந்திருந்து வாலியை தாக்கியதே உலகின் முதல் கொரில்லா தாக்குதல்.(வாலி வானரம், இராமன் மனிதன் என்பது ஒரு முரண்நகை)

#உலகின் முதல் கடல்ப்பால சிவில் கட்டுமான வடிவமைப்பாளர் இராமன் அவர்களே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டியுள்ளார்.

# உலகின் முதல் போர் நிறுத்த அமைதி தூதர் அனுமன், இராவணனுக்கும் , இராமனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போட தூது சென்றுள்ளார்.

#உலகிலே ஸ்டெனோகிராபர் என்ற தொழிலை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, வியாசர் மஹாபாரதம்  எழுத விநாயகரை ஸ்டெனோகிராபராக பணிக்கு வைத்துள்ளார்.

#உலகின் முதல் நில அளவையாளர் வாமனன் அவர்களே ,கால்களாயே உலகை அளந்துள்ளார்.

#உலகிலேயே தொலைநிலைக்கல்வி முறையை முதலில் அறிமுகப்படுத்தியது இந்தியாவே, ஏகலைவன், துரோணரிடம் தொலைநிலைக்கல்வி கற்றுள்ளார்,(கட்டணம் ரொம்ப அதிகம்)

# கெலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ்க்கு முன்னோடியான ரைஸ் பிளேக்ஸ் எனப்படும் அவலைக்கண்டு பிடித்தது இந்தியா தான், குசேலர் , கண்ணனுக்கு அவல் கொண்டு சென்றதே ஆதாரம்.

இப்படி பல பல அறிய ,பெரிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்த நம் நாடு இப்போது பின் தங்கியிருக்க காரணம் நாம் வரலாறு , கலாச்சாரம்,அறிவியல் பின்புலம்  ஆகியவற்றை மறந்து விட்டது தான், எனவே இனியும் மறக்காமல் நம் பழம் பெருமையை மிட்டு எடுப்போம்! இத்தகைய அறிவியலை வேண்டாம் என்பது பிற்ப்போக்குத்தனமே! :-))

இன்னும் எத்தனையோ பல அறிவியல் சிறப்புகள் இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன் ,விடுபட்டவை மற்றும்  உங்களுக்கு தெரிந்தது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்!