Thursday, January 12, 2012

குமுதம் யாருக்கு சொந்தம்?



                                                    

          குமுதம் யாருக்கு சொந்தம்?




திரு எஸ்.ஏ.பி அவர்களால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட குமுதம் வார இதழ், அவரது மறைவுக்கு பின்னர் பல சர்ச்சைகளின் மையமாக திகழ்கிறது என்பதை வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிவார்கள்.இப்போது மேலும் முற்றிய நிலைக்கு போய்விட்டது மிகவும் வருந்த தக்கது.

ஏனோ இந்த பிரச்சினைக்குறித்து ஊடகங்களும் ஒரு திருட்டு மவுனம் பூண்டு(வெங்காயம் மிஸ்ஸிங்கோ?) இருக்கின்றன. என்றே தோன்றுகிறது. வழக்கமாக சிறிய விஷயத்தையும் ஊதிப்பெரிதாக்கும் துப்பி எறியும் பத்திரிக்கைகளும் மவுனகுருவாக இருக்கின்றன. நடிகர்,நடிகையரின் அந்தரங்கம் என்றால் காணாததையும் கண்டதாக எழுதுவார்களாயிருக்கும். :-))

இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம  பதிவுப்போட்டு இருக்காங்களோ?

சரி இந்த வார குமுதம் பத்திரிக்கையில் வந்துள்ள பகிரங்க அறிக்கையில் இருந்து மேட்டர்(இது சமாச்சாரத்த சொன்னதுப்பா) என்னனு பார்ப்போம்...

திரு .ஜவகர் பழனியப்பன் த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.

திருமதி.கோதை பழனியப்பன் ,தன்னிச்சையாக குமுதம் நிர்வாகத்திற்கு சேர்மன், மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவித்துக்கொண்டாராம்..மேலும் ஓரு இடைக்கால தடையும் வாங்கினாராம்.(எதுக்கான இடைக்கால தடை?) அந்த தடை நிர்வாகத்தினைப்பாதிக்கும் என வரதராஜன் நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கினாராம்.

பின்னர் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் முறையாக அறிவிக்கப்பட்டு மூன்று முறைக்கூடியுள்ளதாம். இப்போது யார் நிர்வாக இயக்குநர்,, சேர்மன் என்ற சர்ச்சை நீடிக்கும் போது யாருக்கு கூட்டம் கூட்ட அறிவிப்பு கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு நல்ல கேள்வி இப்போ நீங்க கேட்கணுமே? கேட்டாச்சா...சரி அடுத்துப்போவோம்.

முறையே 20-9-2011,10-10-2011, மற்றும் 2--01-2012 ஆகிய நாட்களில் கம்பெனி இயக்குநர்களின் நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் திரு.ஜவகர் பழனியப்பன், திருமதி.கோதை பழனியப்பன் ஆகியோர் கலந்துக்கொள்ள தவறியதால் ,அவர்கள் இயக்குநர்கள் என்ற பொறுப்பையும் இழந்துவிட்டார்களாம். எனவே இனிமேல் மேற்கொண்டவர்களுடன் யாரும் குமுதம் தொடர்பாக தொடர்புக்கொள்ளக்கூடாதாம்.

இப்போது என்னுள் சிலக்கேள்விகள்,

# கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு இப்போது ஒரு நிர்வாகம் அதே பிரச்சினையின் மீதே இயக்குநர்கள் கூட்டத்தினை வைத்தே தீர்ப்பு சொல்ல முடியுமா? பின்னர் கோர்ட் எதுக்கு?

#மேலும் மிக குறுகிய காலத்தில் ஏன் மூன்று இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்பட்டது? அவர்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவா? இங்கு கவனிக்க வேண்டியது குமுதம் அலுவலகம் செல்ல காவல் துறைப்பாதுகாப்பினை இருவரும் கேட்டு மறுக்கப்பட்டுள்ள ஒரு சூழல்.

# சர்ச்சைக்குறிய நிலையில் இக்கூட்டத்தை கூட்டும் அதிகாரம், தலைமை தாங்கும் பொறுப்பு யாருக்கு?

# கணவரின் சொத்துக்கு மனைவி பாத்தியதை இல்லையா?

#தந்தையின் சொத்துக்கு மகன் பாத்தியதை இல்லையா, அவர் வெளிநாட்டில் வாழ்ந்து ,அங்கேயே குடியுரிமைப்பெற்றிருந்தாலும்.

#நியமிக்கப்பட்ட ,அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர்,ஆனால் அது அவரது சொத்து அல்ல என்றாலும் உரிமைக்கொண்டாட முடியுமா?

# இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துரிமை சட்டம் இதில் செல்லாதா?

இப்போ குமுதம் யாருக்கு தான் சொந்தம்? தெரிஞ்சா சொல்லுங்க யாராவது.


பின் குறிப்பு:

மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்காலங்களில் பலப்பத்திரிக்கைகளுக்கும் அதிகம் எழுதி அனுப்புவேன்(5 ஆம் வகுப்பிலேயே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டேன், எப்போவாது கல்கண்டு, சூப்பர் நியூஸ் (சூப்பர் நாவல்,-சுபா வகை) அதில் வரும்) பெரும்பாலும் கிணறு-கல் தான். ஆனால் குமுதத்தில் மட்டும் அவ்வப்போது வரும், ஒரு நம்பிக்கையை தரும். பல பத்திரிக்கைகளிலும் பெரும்பாலும் வாசகர் கடிதம் வரும். பிலாக் ஆரம்பித்த காலத்திலிருந்து அனுப்புவதில்லை, நாம எழுதி, இவனுங்க என்ன பரிசீலனை செய்றது என்ற ஒரு எண்ணம் தான்(கொஞ்சம் ஓவர் குசும்பு உனக்குனு சொல்வது கேட்கிறது).அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.