Wednesday, May 16, 2012

2g scam-சூரியனுக்கே டார்ச் அடிச்ச ராசா வாராருங்கோ!





அலைக்கற்றை ஊழல் வழக்கு எப்படி போகுது யாருக்கு என்ன மாதிரி கோர்ட் ரியாக்ட் செய்கிறது என எல்லாம் பார்த்து விட்டு கடைசியில் ஜாமின் மனுப்போட்டு ஜம்மென வெளியில் வந்துவிட்டார் ஆண்டிமுத்து ராசா , இதற்கிடையில் அவரது உயிருக்கு சிறை தான் பாதுகாப்பான இடம் என வெளியில் வராமல் இருந்தார் என செய்திகள் கசிந்தன. இப்போது பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது போலும் வெளியில் வந்துவிட்டார், உண்மையில் ஊழலின் வீச்சு என்ன எனப்பார்ப்போம், அதற்கு முன்னர் தமிழகத்தில் நடைப்பெற்ற வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் நடைப்பெற்ற ஊழலைப்பார்ப்போம் ,அதே போன்ற செயல்ப்பாட்டில் தான் 2ஜீ ஒதுக்கீட்டிலும் ஊழல் நடைப்பெற்றது. தலைவன் காட்டிய வழியில் தொண்டன் செல்வது என்று சொல்வது இதைத்தானா?

அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டு மனையின் விலை சந்தை மதிப்பில் கோடியை தாண்டி இருந்தப்போதிலும் தமிழக அரசு வீட்டுவசதி வாரியம் அரசு நிறுவனம் என்பதால் மலிவு விலையில் சுமார் 50 லட்சத்துக்கு ஒரு அரசு ஊழியருக்கு அப்போதைய முதல்வர் கலிஞரின் விருப்ப ஒதுக்கீட்டின் படி ஒதுக்கிறது.

அந்த அரசு ஊழியரிடம் 50 லட்சம் பணம் இல்லை பாவம் அப்பழுக்கற்ற ஊழியர் ஆச்சே எனவே அந்த இடத்தினை ஒரு ரியல் எஸ்டேட் காரரிடம் ஒரு கோடிக்கும் மேல் ஒரு தொகைக்கு விற்று விடுகிறார் அதில் கிடைத்த பணத்தை வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தி இடத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

இடமே வாங்கவில்லை ஆனால் முன் கூட்டியே விற்று விடுகிறார் இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம், இப்போ வீட்டு வசதி வாரியம் யாருக்கு இடத்தை விற்றது என்பது ? அரசு ஊழியருக்கா அல்லது ரியல் எஸ்டேட் அதிபருக்கா?

ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்றிருந்தால் அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் ஆனால் அப்படி விற்க விதியில் இடமில்லை, மக்களுக்காக உருவான அமைப்பு வீட்டு வசதி வாரியம். ஆனால் ஒரு அரசு ஊழியர் பெயரில் வாங்கமாலே ஒதுக்கீடு பெற்று கைம்மாற்றப்பட்டு கூடுதல் பணம் அவருக்கு போகிறது.

ஒரு அரசு ஊழியர் வருமானத்திற்கு மீறி சொத்து வாங்க்கினாலே ஊழல் ஆகும், வாங்கியவரோ காவல் துறையில் ஆய்வாளர் பணி நிலை, எனவே 50 லட்ச வீட்டு மனையை வாங்க வழியே இல்லை ஆனால் வாங்கியதாக கணக்கும் காட்டி மேலும் உடனே விற்றும் பணம் பார்த்தாச்சு. இதுக்கு பெயர் தான் விஞ்ஞான ஊழல் என்று பெயர் போல :-))

இதில் கூத்து என்ன என்றால் 50 லட்சத்துக்கு வாங்கியதாக சொன்னால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றம், வாங்கவில்லை , அப்படியே ரியல் எஸ்டேட் அதிபருக்கு கை மாற்றிவிட்டேன் என்றால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகும் ,அதுவும் குற்றம், எப்படிப்பார்த்தாலும் விதி முறை மீறல்,ஆனால் தைரியமாக செய்துள்ளார்கள். இப்படி கண் மூடித்தனமாக தவறு செய்யும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் அரசின் ஒரு பொருளை,வளத்தை குறைந்த விலைக்கு விற்க வைத்து அதிக விலைக்கு வெளிசந்தையில் விற்க துணை செல்வது ஊழலுக்கே வழி வகுக்கும், யாரும் சும்மா விலையை குறைவாக நிர்ணயம் செய்யவோ அல்லது அப்படி குறைவாக விலை நிர்ணயம் செய்ய விதி வகுக்கப்பட்ட ஒன்றை பிரதிபலன் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மாட்டார்கள்.

சிறிய அளவில் தமிழ் நாட்டில் நடைப்பெற்ற இப்படி வாங்கி அப்படி விற்கும் வியாபார யுக்தியினை (mode of operation)பெரிய அளவில் தில்லியில் நடத்திக்காட்டி சாதனைப்புரிந்த ஒருவரை இப்போ பார்க்கலாம்...

2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டின் ஆதி அந்தம் எல்லாம் மக்களுக்கு தெரியும் அதில் ஊழல் நடைப்பெற்ற விதம், மற்றும் நான் நிரபராதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன் என சொல்லும் நேர்மையாளார் ,கொள்கை குணக்குன்று , கழகத்தின் கொபசெ, ஆகிய ஆ.ராசா சொல்வது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் படி இருக்கு எனப்பார்க்கலாம்,

2001 இல் முதலில் வருபவருக்கு முன்னுரிமைனு பி.ஜே.பி வகுத்த கொள்கை அருண் ஷோரி எல்லாம் அதன் படி செயல்ப்பட்டிருக்கிறார் நான் செயல் படக்கூடாதா என்கிறார்,

அப்படி எனில்,

#அப்போது பெட்ரோல் விலையை அரசே நிர்ணயம் செய்ய உரிமை வந்திருந்தது ஏன் ஆட்சி மாறியதும் சந்தை விலைக்கு நிர்ணயம் செய்யலாம் என எண்ணை நிறுவனங்களுக்கு உரிமை வழங்கினீர்கள் ,முன்னர் இருந்த கொள்கை முடிவின் படியே செய்திருக்கலாமே?
#அப்போது பெட்ரோல் விலை 35 ரூ இருந்தது அதே விலைக்கு இப்போதும் விற்கலாமே? பெட்ரோலை பழைய விலைக்கே விற்றால் நஷ்டம் வரும் எனில் அலைக்கற்றையை மட்டும் பழைய விலைக்கு விற்றால் நஷ்டம் வரும் என தெரியாத அப்பாவியா :-)), அட சின்ன தம்பி பிரபு விட ரொம்ப அப்பாவியா இருந்து இருக்காரே ராசா :-))

# ஒரு ஆட்சி சரி இல்லைனு தானே உங்க்களை தேர்வு செய்கிறார்கள் அப்புறம் என்ன அவங்க செய்ததையே செய்கிறோம்னு சொல்ல நீங்க எதுக்கு அதுக்கு அவங்களே ஆண்டு இருக்கலாமே?

விண்ணப்பம்ம் பெறுவதற்கான கடைசி தேதியை திடீர் என முன் கூட்டியே மாற்றி விட்டார் அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்,

1) முதலில் வருபவர்களே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படுவதால் , கடைசித்தேதியில் வரும் விண்ணப்பத்திற்கு பலன் இல்லை எனவே கடைசி தேதிக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறார்,

இது எவ்வாறு சரி இல்லை எனில் , முதலில் வந்த விண்ணப்பங்களில் பல தேவையான தகுதி விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனில் தகுதி இழக்கும் நிலையில் அடுத்துள்ள விண்ணப்பங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, தேதியை முன் கூட்டி மாற்றியதால் பலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பே மறுக்கப்படுகிறது.வரையறுக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யாத 85 விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


இறுதியில் 160 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 122 க்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஆனால் 122 விண்ணப்பங்களையும் போட்டது 22 நிறுவனங்களே, உண்மையான எண்ணிக்கை 22 மட்டுமே மேலும் அந்த 22 என்ற எண்ணிக்கையும் உண்மையல்ல பலவும் பினாமி நிறுவனங்கள் அப்படி எனில் ,
2) குறைவான அலைக்கற்றை உள்ள நிலையில் அதிக விண்ணப்பங்கள் வந்து விட்டன ,எனவே பரிசீலிக்க கால தாமதம் ஆகும் எனவே தேதியை மாற்றினோம் என்கிறார்,ஆதுவே பொய் ஆகிறது.

அவர் சொன்னது சரியா எனப்பார்ப்போம்,

உரிமம் பெற்ற Adonis Projects, Nahan Properties, Aska Projects, Volga Properties, Azare Properties & Hudson Properties ஆகியனவற்றை வாங்கிவிடுகிறது Unitech. தொழில்நுட்ப ரீதியாக அப்படி சொல்லப்பட்டாலும் அனைத்து நிறுவனங்களும் யுனிடெக்கின் ஏற்பாட்டில் உருவானவையே.

ஐந்து விண்ணப்பத்தாரர்களின் உரிமையும் உடனடியாக யுனி டெக் வயர்லெஸுக்கு கை மாறுகிறது,அதாவது யுனிடெக்கின் பினாமி தான் அவர்கள், மொத்தமாக யுனிடெக் வசம் சென்றது 22 license,

Swan Telecom merged itself with Allianz Infratech (P) Ltd.

ஸ்வான் மற்றும் அலயன்ஸ் இரண்டும் ஒருவரே, மொத்தமாக கைப்பற்றியது 15 license,

அதே போல ஐடியா செல் , ஸ்பைஸ் உடன் இணைந்து விடுகிறது, கைப்பற்றியது 13 license,

இது போல 122 விண்ணப்பங்கள் என கணக்கு காட்டப்பட்டு 22 பேருக்கு தான் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் அதிக விண்ணப்பங்கள் வந்துவிட்டன ,பரிசிலீக்க கால தாமதம் ஆகும் என கடைசி தேதியை மாற்றினோம் என்பது அடிப்பட்டுப்போகிறது.

இப்போது எப்படி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனப்பார்ப்போம்,

1)ஸ்வான் அலை கற்றை வாங்க செலவிட்டது 1537 crores தனனு பங்கில் 45% (approximate) Etisalat of UAE க்கு Rs.3,544 கோடிகளுக்கு விற்றுவிட்டது,

45% பங்கின் மதிப்பு= 3,544 கோடி எனில்
100% மதிப்பு = 3,544*100/45
=7,875.5 கோடிகள்

அதாவது அரசிடம் இருந்து 1,537 கோடிகளுக்கு வாங்கிய அலைக்கற்றையின் உண்மையான மதிப்பு 7,875.5 கோடிகள், இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு,

7,875.5-1,537=6338.5 கோடிகள்.

2) யுனி டெக் 1,651 கோடிகளுக்கு பெற்ற அலைக்கற்றை உரிமத்தில் 60% பங்கினை நார்வேயின் டெலிநாருக்கு 6,120 கோடிகளுக்கு விற்றுவிட்டது,

60% பங்கு= 6,120 கோடிகள் எனில்

100% மதிப்பு= 6120*100/60
=10200 கோடிகள்.

யுனிடெக் பெற்ற அலைக்கற்றையின் உண்மையான மதிப்பு 10200 கோடிகள்,
அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு=10,200-1,651=8549 கோடிகள்.

இவை ஒரு உதாரணம் தான் இது போல 22 நிறுவனங்களும் 122 ,2ஜீ உரிமங்கள் மூலம் ஏற்படுத்திய மொத்த இழப்பு என மத்திய தணிக்கை துறை கணக்கிட்டது த்ஆன் 1,75,000 கோடிகள் என்பது ,இந்த தொகை மிகையானது என சிலர் சொல்லக்கூடும் ,ஆனால் எப்படிக்கணக்கு போட்டாலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது என்பது மேற்கண்ட உதாரணங்கள் மூலம் தெளிவாக விளங்கும்.

உலகில் நடந்த அரசியல் ஊழல்களில் டாப்-10 இல் இந்திய தொலைத்தொடர்பு ஊழலுக்கு இரண்டாவது இடத்தினை டைம் பத்திரிக்கை கொடுத்துள்ளது.


ஆ.ராசா மட்டும் இன்னும் கொஞ்ச காலம் தொலைத்தொடர்பு துறையில் இருந்திருந்தால் முதலிடம் பிடித்து சாதனைப்புரிந்து இருப்பார். அந்த மாபெரும் சாதனையை செய்ய விடாமல் சதி செய்து கெடுத்து விட்டார்கள் என மஞ்சள் துண்டு தலைவருக்கு மிகவும் வருத்தம் ,வீராணம் போல பல சாதனை திட்டங்கள் தீட்டிய மனுநீதி சோழனின் மறுப்பிறப்பான கலிஞருக்கே டைம் பத்திரிக்கையில் இடம் கிடைக்கவில்லை ஆனால் அவரது அன்பு தம்பி ,கொள்கை குணக்குன்று ராசா டைம் பத்திரிக்கையில் இடம் பிடித்து சாதனை புரிந்து சூரியனுக்கே டார்ச் அடித்துவிட்டார், அவரது சாதனையைப்பாராட்ட மனமில்லாத சிலர் திட்டம் போட்டு அவதூறு பரப்புவதாக சில கழக அல்லக்கைகள் பதிவுப்போட்டு புலம்பக்கூடும்!

மேலும் 2ஜீ ஊழலில் அதிகம் பலன் அடைந்த நிறுவனங்கள், நீதி மன்ற விசாரணையிலும் சிக்காமல் தண்ணிக்காட்டியவர்கள் ,சுப்ரமணியம் சுவாமியின் குற்றச்சாட்டின் படி ஊழலுக்கு ஒரு வகையில் துணைப்போயும் எவ்வித விசாரணைக்கும் ஆளாகாத ப.சி போன்றவற்றை நேரம் இருப்பின் பின்னர் பார்க்கலாம்.

பின் குறிப்பு:

தகவல்கள் ,படங்கள் உதவி,
விக்கி, கூகிள், எக்கனாமிக் டைம்ஸ், டைம் இணைய தளங்கள், நன்றி!