Saturday, June 23, 2012

குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)

(ஹி..ஹி படிக்க போர் அடிச்சா படத்தைப் பாருங்க!)


புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு அரசு மிரட்டுவது வழக்கம், ஒரு சுண்டு விரல் அளவு சிகரெட்டுக்கு அம்மாம் அளப்பரை செய்யும் அரசு 16 ஏக்கர் பரப்பளவில் பெரிய புகைப்பானை உருவாக்கி நகர மக்கள் அனைவரையும் புகைக்க வைத்தால் என்ன நோய் வரும்னு மாண்புமிகு நகரத்தந்தையைதான் கேட்கணும் :-))

பள்ளிக்கரணை திடக்கழிவு மேலாண்மை திறந்த வெளிக்கிடங்கின் பரப்பளவு தான் 16 ஏக்கர் அங்கு நாள் ஒன்றுக்கு 120 டன் நகர திடக்கழிவுகள் கொட்டப்படுகிறது. பேரு வச்சாப்போல மேலாண்மை செய்றாங்களா எனக்கேட்டால் வரும் பதில் தான் தீவிபத்து அல்லது திட்டமிட்டு பற்றவைத்து திடக்கழிவு என்ற குப்பையின் அளவுக்குறைக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அப்படி சில நாட்களுக்கு முன் பள்ளிக்கரணை திடக்கழிவு கிடங்கு பற்றிக்கொண்டது (அ)பற்ற வைத்ததன் மூலம் பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் புகை மூட்டம் பரவி அனைவரையும் புகைப்பிடிக்க வைத்தது.

சாதாரண சிகரெட்டிலாவது புகையிலை புகை மட்டுமே அதுவும் சிறிய அளவில் ,பள்ளிக்கரணை புகை அரசு செலவில் உருவான சிறப்பு புகைப்பான் இல்லையா எனவே ஸ்பெஷலாக டையாக்சின், கரியமிலவாயு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைட், நைட்ரஜன் மோனாக்சைடு, டையாக்சைடு, கந்தக வாயுக்கள் இன்னமும் பல, பல அறிய நச்சு வாயுக்கள் என புஃபே முறையில் கதம்பமாக அவ்வழியே பயணித்தோரின் நுரையீரலை நிறைத்தது, மேலும் அப்பகுதி மக்களுக்கும் விண்டோவ் டெலிவரியாக இலவசமாக புகை வழங்கப்பட்டது.


இனிமேல் அம்மக்களுக்கு சிகரெட் பிடித்தாலும் புற்று நோய் வராது ஏன் எனில் அதை விட நச்சுத்தன்மையுள்ள, அதிகமான புகையை அவர்கள் சுவாசித்துவிட்டார்களே அப்புறம் எப்படி புற்று நோய் வரும் அதை விட பெரிய நோய் வேண்டுமானால் வரலாம் :-))

இக்குப்பை கிடங்குகளின் வழியே சென்றால் எப்பொழுதும் காணலாம், மணிரத்தினம் படத்தில் காட்டப்படும் ஊட்டி லோகேஷன் போல புகைமண்டலமாகவே காணப்படும், பெரும்பாலும் சொல்லப்படும் காரணம் குப்பையில் இருந்து பிளாஸ்டிக்,இரும்பு என பொறுக்குபவர்கள் நெருப்பு வைத்து விடுகிறார்கள் என்று, ஆனால் மாநகராட்சி ஊழியர்களே குப்பையின் அளவை குறைக்க ஆங்காங்கே நெருப்பு வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை மறுத்து மாநகர தந்தை சொன்ன விளக்கம் இன்னொரு குபீர் ரக காமெடி ஆகும், குப்பையில் தானாக உருவாகும் மீத்தேன் வாயு பற்றிக்கொள்வதே தீப்பிடிக்க காரணம் என்பதே. தீப்பிடிப்பதற்கு மீத்தேன் தான் காரணம் எனில் , அது தெரிந்தும் இத்தனை நாளாக திறந்த வெளியில் குப்பைக்கொட்டி வைத்து பெருமளவில் மீத்தேன் உருவாக்கியுள்ளதை அவரே ஒப்புக்கொள்கிறார்.மாநகராட்சி சுற்று சூழலை பாதிக்க செயல்ப்படுகிறது என சொல்லும் ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது.

மீத்தேன் என்பது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு , வளிமண்டல ஓசோனில் ஓட்டை போடுகிறது.அப்படி இருக்க மீத்தேனால் தீ விபத்து ஏற்படுகிறது என்பதை மிக சாதாரணமாக சொல்கிறார். எனவே தீவிபத்து ஏற்படவில்லை என்றாலும் மாநகர குப்பைக்கிடங்குகள் சுற்று சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கிறது, ஆனால் அது குறித்து விழிப்புணர்வே இல்லாமல் திறந்த வெளிக்குப்பைகிடங்குகளை செயல் படுத்தி வரும் அரசு நிர்வாகம் , மக்களுக்கு மட்டும் சுற்று சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய வேடிக்கை. முதலில் சுற்று சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தான் என நினைக்கிறேன்.

நமது நாட்டில் திடக்கழிவு மேலாண்மை (municipal solid waste management)என்பது பெயரளவிலே கடைப்பிடிக்கப்படுகிறது , அவர்கள் செய்வதெல்லாம் குப்பையை சேகரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டிவிட்டு மற்றதை இயற்கை பார்த்துக்கொள்ளும் என விட்டு விடுவதே. முறையான தொழில்நுட்பங்களைப் பயன்ப்படுத்துவதே இல்லை.சுமார் 6.5 மில்லியன் மக்கள் தொகைக்கொண்ட சென்னையில் இது வரையில் ஒரு "லேண்ட் ஃபில்" அல்லது மட்க வைக்க என கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்ப்படுத்தப்படவே இல்லை.

சென்னை குப்பை உற்பத்தி மற்றும் கையாளும் வசதிகள்:

மொத்த மக்கள் தொகை:6.5 மில்லியன்.

தனிநபர் குப்பை உற்பத்தி: 500 கிராம்/நாள்.

மொத்த குப்பை அளவு: 3200 மெ.டன், மேலும் 500 டன் கட்டிட இடிப்பாடுகள்.

இவற்றை சேகரித்து வைக்க சென்னையில் கொடுங்கையூர் , பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பை கிடங்குகள் உள்ளன.

கொடுங்கையூர்:


பரப்பளவு:350 ஏக்கர்,

செயல்பட்டு வரும் காலம்- 25 ஆண்டுகள்.

எதிர்காலம்- 2015 வரையில் செயல்படும்

தினசரி சேகரிக்கும் குப்பை அளவு:1400-1500 மெட்ரிக் டன்கள்.

பெருங்குடி:

பரப்பளவு: 200 ஏக்கர்.

செயல்பாட்டு காலம் : 20 ஆண்டுகள்.

எதிர்காலம்: 2015 வரையில் செயல்படும்.

தினசரி சேகரமாக்கும் குப்பை அளவு: 1500- 1800 மெட்ரிக் டன்கள்.

இவை இரண்டு அல்லாமல் பள்ளிக்கரணையில் 16 ஏக்கர் பரப்பளவில் தினசரி 120 டன்கள் குப்பை சேகரமாகிறது.

எனவே சென்னை மாநகர எல்லையில் மட்டும் சுமார் 4000 மெ.டன்கள் குப்பைகள் ஒரு நாளுக்கு உற்பத்தி ஆகிறது. இது அல்லாமல் அம்பத்தூர் , பூந்தமல்லி, தாம்பரம் போன்ற புறநகர் குப்பைகள் வேறு இருக்கிற்து. அவை இக்கணக்கில் இல்லை.

மாநகர குப்பைகளின் இயல்பு:

Food waste 8.00 %
Green waste 32.25 %
Timber(wood) 6.99 %
Consumable plastic 5.86 %
Industrial Plastic 1.18 %
Steel & Material 0.03 %
Rags & Textiles 3.14 %
Paper 6.45 %
Rubber & Leather 1.45 %
Inerts 34.65 %

இவ்வளவு குப்பைகளையும் சேகரித்து அறிவியல் முறைப்படி சுத்திகரிக்கவோ, மட்கவோ செய்யாமல் திறந்த வெளியில் கொட்டி சுற்று சூழலை மாசுப்படுத்துவதையே அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி செய்து வருகிறது.

இவ்வாறு திறந்த வெளியில் கொட்டுவதால் எரியும் போது முன் சொன்ன பல நச்சுவாயுக்களும், மேலும் காற்றில்மிதக்கும் தூசுக்கள், கார்பன் துகள்களும் காற்றில் அதிகம் உருவாகிறது.பள்ளிக்கரணையில் கார்பன் துகள் ஒரு கனமீட்டர் காற்றில் 144g /m³ ,பெருங்குடியில் 216 g /m³ ,உள்ளது.வழக்கமான பாதுகாப்பான அளவு 100கி/மீ3 ஆகும். மேலும் Carbon dioxide (CO2) அளவும் காற்றில் 515- 399 ppm (parts per million) ஆக உள்ளது.எல்லாமே பாதுகாப்பான அளவு என வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.

இது நேரடியாக அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு நோய்களை உருவாக்கும். மேலும் மழை நீர் குப்பைகளில் இறங்கி நிலத்தில் ஊடுருவும் போது குப்பைகளின் நச்சும் கலந்து நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது.

ஆனால் மாநகராட்சியோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ,குப்பை அள்ளுவதே பெரிய சேவை இதில் பாதுகாப்பாக மட்க செய்யணுமா என நினைக்கிறார்கள் போல.பெயருக்கு நாங்களும் கொஞ்சம் தொழு உரம் தயாரிக்கிறோம் என கணக்கு காட்டுகிறார்கள். உண்மையில் அப்படி செய்திருந்தால் ஒரு நாளைக்கு நான்காயிரம் டன் என ஒரு மாதத்திற்கு 12 லட்சம் டன் குப்பையினை அப்படி தொழு உரம் ஆக்கினால் தமிழ்நாடு முழுக்க இரசாயன உரம் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யலாம்.

மாநகர திடக்கழிவுகளை கையாள என்ன தீர்வு உள்ளது?

இப்போது தான் மாநகராட்சி எப்படி கையாளுவது என்று அறியவும், அதற்கான அமைப்பினை உருவாக்கவும் டெண்டர் விட்டுள்ளதாம். அவர்கள் சொல்லும் தீர்வும் அதிகப்பட்சம் லேண்ட் ஃபில்கள் அமைப்பதாகவே இருக்கும். ஆனால் அதனை விட ஒரு நல்ல தீர்வு உள்ளது. அது தான் குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரித்து மாற்று எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது.

குப்பையில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியுமா ? முடியும் எல்லா கழிவிலும் மட்க கூடிய கரிமப்பொருள்கள் உள்ளது அவற்றின் அடிப்படை மூலகம் செல்லூலோஸ் ஆகும். இவ்வாறு செல்லுலோஸ் இல் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு "செல்லுலோஸ் எத்தனால் அல்லது மர எத்தனால்" எனப்பெயர்.

வழக்கமாக எத்தனால் ஆனது கோதுமை, மக்கா சோளம், சோளம் ,சர்க்கரை கிழங்கு ஆகியவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து உருவாக்கப்படும் சர்க்கரையின் மூலமும், கரும்பின் மொலாஸஸில் உள்ள சர்க்கரை மூலமும் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை எனப்ப்டும் சுக்ரோஸ் ஒரு இரட்டை சர்க்கரை ஆகும் இதனை நீராற்பகுப்பு மூலம் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய ஒற்றை சர்க்கரையாக மாற்றி பின்னர், சாக்ரோமைசெஸ் செர்விசே (Saccharomyces cerevisiae) எனப்படும் என்சைம் நுண்ணுயிர் மூலம் நொதிக்க செய்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

இப்படி தயாரிக்கப்படும் எத்தனால் மலிவானது ஒரு லிட்டர் தயாரிக்க சுமார் 25 ரூ செலவு ஆகும், ஆனால் மூலப்பொருட்களான தானியங்கள்,கரும்பு போன்றவை பயிரிட வேண்டும்,அவற்றுக்கு செலவாகும் ஆற்றல், மனித உழைப்பினையும் கணக்கில் கொள்ள வேண்டும் அப்படிப்பார்த்தால் பெட்ரோலிய தயாரிப்புக்கு பக்கத்தில் வருகிறது.

உணவுப்பொருட்களாக பயன்படும் தானியங்களும் , சர்க்கரையும் எத்தனால் தயாரிப்புக்கு அதிகம் பயன்ப்படுத்தினால் ,மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் பக்க விளைவும் உண்டு.

இதற்கு மாற்று தான் மூலப்பொருள் உற்பத்தி தேவையில்லாத "தாவர,நகரக்கழிவில்" (farm waste and municipal solid waste)இருந்து தயாரிக்கப்படும் பயோ மாஸ் எத்தனால் தயாரிப்பு முறை ஆகும்.

இதில் இரண்டு வகையான பயோ மாஸ் உள்ளது.

#நகர திடக்கழிவுகளில் இருந்து பிரிக்கப்படும் பயோ மாஸ்.

# தாவர கழிவுகள் மற்றும் பயிரிடப்பட்ட தாவரங்கள் மூலம் கிடைக்கும் பயோ மாஸ்.

கிடைக்கும் வழிகள்:


# கோதுமை , நெல், சோளம், மக்கா சோள அறுவடைக்கு பின் கிடைக்கும், வைகோல், தண்டுகள், தக்கைகள்.

# கரும்பு அறுவடைக்கு பின் கிடைக்கும் தோகைகள், கரும்பு ஆலையில் மிஞ்சும் சக்கை,பகசி(bagasse) போன்றவை.

#மரம் அறுக்கும் இடங்களில் சேகரமாகும் மரத்தூள், கழிவு மரத்துண்டுகள்.

#வனங்களில் இருந்து பெறப்படும் இலை, கிளைகள்.

# கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் ,சுத்திகரிக்க வளர்க்கபடும் விட்ச் கிராஸ்(witch grass)

#அரிசி ஆலை இன்ன பிற தானிய அரவை நிலையங்களில் உப பொருளாக கிடைக்கும் தவிடு, எண்ணை வித்துக்களில் உடைத்து நீக்கப்பட்ட மேல் தோல்.

#தரிசு நிலங்களில் எளிதில் வளரும் மரங்களை வளர்த்தும் அறுவடை செய்து பயன்ப்படுத்தலாம்.

எ.கா: வேலிக்காத்தான் எனப்படும் புரோசோபிஸ் ஜுலிபுளோரா(prosopis juliflora) மரம்.

#மேலும் தமிழ் நாட்டில் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் தானாக ஆக்ரமித்து வளரும் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத்தாமரைகளை அகற்றி பயோ மாஸ் ஆகவும் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். இதனால் நீர் நிலைகளும் சுத்தமாகும்.

#மேலும் அனைத்து வகையான விவசாய,தாவரக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம்.

#அனைத்து வகை தொழில் துறை மூலம் கிடைக்கும் மட்கும் கரிம கழிவுகள்.

நகரக்கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கரிம பொருட்கள், மற்றும் விவசாய தாவரக்கழிவு என இரண்டு வகையான பயோமாசிலும் எத்தனால் தயாரிக்க பொதுவான ஒரே செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பு முறையே பயன்படுகிறது.

செல்லுலோஸ் எத்தனால் தயரிப்பு முறைகள்:

# நீராற்பகுப்பு & நொதித்தல் முறை,(hydrolysis&Fermentation)

#ஆவியாக்கி திரவமாக்கல் முறை(Gasification).

# வெப்ப முறை எனப்படும் பைராலிசிஸ்.(pyrolysis. )

ஆகிய முறைகள் பெருமளவு பயன்ப்படுகிறது.இங்கு உதாரணமாக நகர திடக்கழிவில் இருந்து நொதித்தல் முறையில் செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பதைக்காணலாம்.

இதே முறையில் தாவர கழிவு பயோ மாசில் இருந்தும் எத்தனால் தயாரிக்கலாம்.இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு என்பதால் நிறைய பண்ணை தாவர கழிவுகள் உள்ளதால் ,அதிக அளவில் எத்தனால் மூலப்பொருள் செலவின்றி உற்பத்தி செய்ய முடியும்.

திடக்கழிவு செல்லுலோஸ் எத்தனால்:

எல்லா வகையான நகர திடக்கழிவிலும் சுமார் 60 சதவீதம் மட்கும் கரிமப்பொருட்களே உள்ளன.இவற்றை பிரித்து எடுத்தாலே தொடர்ந்து மூலப்பொருள் உற்பத்தி செலவு மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் எத்தனால் தயாரிக்க கிடைக்கும்.

நீராற்பகுப்பு மற்றும் நொதித்தல் முறை:

தாவர மற்றும் திடக்கழிவில் உள்ள கரிம மூலங்கள் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ்,ஸ்டார்ச், மற்றும் சர்க்கரை ஆகும். இவை எளிதில் நொதித்தல் வினைக்கு உட்படாது எனவே,

முதலில் திடக்கழிவுகளை நன்கு சிறு துண்டுகளாக பல்வரைசர் மூலம் அரைத்துக்கொள்வார்கள்.இதனுடன் நீர் சேர்த்து செல்லுலோஸ் கூழ் உருவாக்கப்படும்.

இப்படி கிடைக்கும் தாவரக்கூழினை நீராற்பகுப்பு(hydrolysis) செய்து எளிய சர்க்கரையான குளுக்கோஸ் ,பிரக்டோஸ் ஆக மாற்ற வேண்டும். நீராற்பகுப்பு செய்ய நீர்த்த கந்தக அமிலம், மற்றும் வினையூக்கிகள் பயன்ப்படுத்தப்படும்.

நீராற்பகுப்பினால் எளிய சர்க்கரைக்கலவையாக சுக்ரோஸ், ஸைலோஸ்,ஆர்பினோஸ் ஆகியவை கிடைக்கும் ,உப பொருளாக "லிக்னைன்"எனப்படும் புரதமும் கிடைக்கும். சோடியம் ஹைட்ராக்சைடு ,கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றைப்பயன்ப்படுத்தி லிக்னைன் திட நிலையில் படிய வைத்து தனியே பிரிக்கப்பட்டு விடும்.

பின்னர் சர்க்கரை கரைசலில் உள்ள கந்தக அமிலமும் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்ப்படுத்தப்படும்.

இந்த நீராற்பகுப்பு முழுவதும் டைஜெஸ்டர்(digestion chamber) எனப்படும் கலத்தினுள் நிகழும்.

பின்னர் எஞ்சிய சர்க்கரை கரைசல் நொதிக்கும் தொட்டிக்கு(fermentation chamber) மாற்றப்படும், அங்கு சாக்ரோமைசஸ் செர்விசியே(Saccharomyces cerevisiae) என்சைம் கலவையுடன் சேர்க்கப்பட்டு நொதிக்கவைக்கப்படும். இதன் மூலம் எத்தனாலும், கரியமிலவாயும் கிடைக்கும்.பின்னர் எத்தனால் வாலைவடித்தல்(Distillation) மூலம் பிரிக்கப்பட்டு 100 சதவீதம் தூய எத்தனால்(unhydrous ethanol) ஆக மாற்றப்படும்.

உபபொருளாக கிடைக்கும் லிக்னைன்(lignin) ஐ மீண்டும் பைரோலிஸ் செய்து எத்தனால் ஆக்கவும் முடியும் அல்லது boiler fuel ஆகவும் பயன்ப்படுத்தலாம் or சுத்திகரித்து தொழு உரமாகவோ அல்லது கால்நடை தீவனமாகவோ பயன்ப்படுத்தலாம்.

ஒரு டன் நகர திடக்கழிவில் இருந்து சுமார் 185 லிட்டர் (50 கேலன்) நீரற்ற 100 சதவீத எத்தனால் தயாரிக்க முடியும்.அதே சமயம் தாவரக்கழிவு பயோமாஸ் முறையில் ஒரு டன்னுக்கு 250-270 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். கரிம மூலப்பொருட்களின் அடர்த்தி விகிதத்தை பொறுத்து எத்தனால் உற்பத்தி கிடைக்கும்.

பயோ மாஸ் எத்தனால் பயன்கள்:

#மிக அதிக அளவு திடக்கழிவு உற்பத்தியாகும் இடங்களில் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலான பணி , இப்படி எத்தனால் ஆக மாற்றுவதன் மூலம் கழிவும் அகற்றப்படும் , மேலும் வாகன எரிபொருளாகவும் எத்தனாலைப் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

# எத்தனால் சுற்று சூழலை மாசுப்படுத்தாத எரிபொருள்,எத்தனாலை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவதால் 85% காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைகிறது. மேலும் பெட்ரோலிய எரிபொருள் வெளியிடும் கார்பனை விட எத்தனால் வெளியிடும் கார்பனே தாவரங்களால் எளிதில் கிரகிக்கப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை இயற்கையாக கரியமில வாயு சிறைப்பிடித்தல்( Carbon sequestration ) என்கிறார்கள்.

#எத்தனாலின் ஆக்டேன் எண் பெட்ரோலை விட அதிகம் என்பதால் ,வாகன எஞ்சின் அதிக ஆற்றலுடன் இயங்கும். பந்தயக்கார்களில் 100% எத்தனால்/மெத்தனால் பயன்ப்படுத்தப்படுகிறது. பெட்ரோலுடன் கலந்து பயன்ப்படுத்தும் போது பெட்ரோலின் ஆக்டேன் மதிப்பும் உயரும்.


#லிக்னைன் என்ற இயற்கை உரமும் கிடைக்கும்.

சுருக்கமாக சொன்னால்,

நகரதிடக்கழிவு->பயோமாஸ் எத்தனால் தயாரிப்பு->எரி பொருள் எத்தனால்-> லிக்னைன்-> தொழு உரம்-->கால்நடை தீவனம்-> சுற்று சூழல் பாதுகாப்பு->உள்நாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு->அன்னிய செல்வாணி சேமிப்பு.

என ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்.

#இப்படி நகர திடக்கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை அமெரிக்காவில் பல மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய பயோமாஸ் எத்தனால் ஆலை உள்ளது.அமெரிக்கா முழுவதும் மொத்தமாக 12 மில்லியன் லிட்டர் செல்லுலோஸ் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.மேலும் 8 மில்லியன் லிட்டர் தயாரிக்க முயற்சிகள் நடைப்பெறுகிறது.

#எகிப்தின் கெய்ரோ நகர் கழிவுகளை எத்தனால் ஆக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் டாலர் முதலீட்டில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் திடக்கழிவினை எத்தனால் ஆக மாற்றும் ஆலை அமைக்க உள்ளார்கள்.

இந்தியாவிலும் சென்னை ,மும்பை, தில்லி, கொல்கட்டா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் நாள் தோறும் பல ஆயிரம் டன்கள் திடக்கழிவு உற்பத்தியாகிறது, அவற்றை எல்லாம் எத்தனால் ஆக மாற்ற சிறிது முதலீடு செய்தாலே போதும், நம் நாட்டின் எரிபொருள் தேவையின் இறக்குமதி பெருமளவு குறையும், சுற்று சூழலும் பாதுகாக்கப்படும். அரசு எந்திரம் விழித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.விழிக்கும் என நம்புவோம்!

------------------------------------------
பின் குறிப்பு:

மேற்கோள் தளங்கள்:

1)http://weekly.ahram.org.eg/2009/969/sc71.htm

2)http://www.jgc.co.jp/en/04tech/07bio/bme.html

3) http://www.chennaicorporation.gov.in/departments/solid-waste-management/index.htm

தகவல் மற்றும் படங்கள் உதவி ,விக்கி, கூகிள், தி இந்து இணைய தளங்கள் நன்றி!

*****