Wednesday, August 22, 2012

அஃதே,இஃதே-2 :சென்னை தினம்,பாலகுமாரன், விளக்கடுப்பு,ரஜினி.



மதராஸப்பட்டிணம்.

நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அந்நாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

மேற்கொண்டுப்படிக்க செல்லவும்...


ஹி..ஹி சென்னை தினத்திற்கு தனியே பதிவு போட கொஞ்சம் சோம்பல் எனவே முன்னர் போட்ட பதிவுக்கு ஒரு விளம்பரம் :-))
********

பிடித்தால் படியுங்கள்:பாலகுமாரன் வலைப்பதிவு.



எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு காலத்தில் இதயம்பேசுகிறது, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல்,மாலைமதி போன்ற பத்திரிக்கைகள் மற்றும் மாத நாவல் புத்தகங்களின் அமுத சுரபியாக ,காதலும் வாழ்வும் கலந்த நாவல்களையும், அவ்வப்போது உடையார் என சரித்திரமும் எழுதி , சுஜாதா போன்ற அறிவியல் கலந்து எழுதும் ஜனரஞ்சகமான எழுத்தாளார்களுக்கு ஈடுக்கொடுத்து ஓடிய இரும்பு எழுத்துக்குதிரை.

அவரது இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள்,பயணிகள் கவனிக்கவும் போன்ற நாவல்களை படித்து அடடா என வியந்த விவரம் அறியாக்காலம் எல்லாம் கடந்து விட்டாலும் இன்றும் படிக்க தகுதியான நாவல்களே.

அவரது அனுபவங்களை தொகுத்து "பாலகுமாரன் பேசுகிறார்" என்ற பெயரில் வலைப்பதிவாக அவரது அனுமதியுடன் ஒரு வாசகர் வெளியிட்டுக்கொண்டிருந்தார் தற்சமயம் புதிதாக எதுவும் அதில் காணக்கிடைக்கவில்லை என்றாலும், பழையப்பதிவுகளே படிக்க சுவாரசியமாக இருக்கின்றன, ஆன்மீக கேள்விப்பதில்,சினிமா, அவரது எழுத்தனுபவம் என நிறையக்காணக்கிடைக்கிறது. தற்சமயம் அமரர்.யோகி.ராம்சுரத்குமார் (விசிறி சாமியார்) அவர்களின் சீடராக முழுக்க ஆன்மீகத்தில் பாலகுமாரன் அவர்கள் மூழ்கிவிட்டார் ,புதிதாக படைப்புகள் எதுவும் எழுதுவதில்லை.

தனக்கு கதை எழுத சொல்லித்தந்ததே சுஜாதா தான் என தன்னை அவரின் சீடர் என வெளிப்படையாக ஒருப்பதிவில் பகிர்ந்திருக்கிறார்

மேலும் படிக்க செல்லவும் ...

தற்சமயம் தமிழ்மணம் போன்ற பிரபலதிரட்டிகளில் குப்பையான பதிவுகளே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், இது போன்ற சுவாரசியமான பதிவுகள் பழைய சரக்காக இருந்தாலும் ஆயிரம் மடங்கு மேல் எனவே வாசித்து தான் பாருங்களேன்!

********

ஒளிமயமான எதிர்காலம்.



மகாராஷ்டிராவில் Phaltan என்ற இடத்தில் உள்ள Nimbkar Agricultural Research Institute (NARI) என்ற தன்னார்வ அமைப்பு கிராமப்புற இந்தியாவிற்கு தேவையான விவசாயம், சுகாதாரம்,மாற்று எரிப்பொருள் என பல வகையிலும் ஆய்வுகள் செய்து புதிய கண்டுப்பிடிப்புகளையும், முறைகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு செலவில்லா/குறைவான செலவில் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்ய உதவி வருகிறது.

அவ்வமைப்பினை சேர்ந்த பொறியாளார் -கண்டுப்பிடிப்பாளர் அனில் ராஜ்வன்ஷி புதிதாக ஒளிக்கொடுக்கும் அதே சமயத்தில் சமைக்கவும் பயன்ப்படும் அடுப்பு என ஒரு மண்ணெண்ணை விளக்கினை கண்டுப்பிடித்துள்ளார்.

கவுண்டமணிப்புகழ் பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் ஆனால் அதன் மேல் புறம் வெளியேறும் வெப்பத்தினை பயன்ப்படுத்தும் "வெப்பக்கடத்தியை" அமைத்து அதன் மூலம் அடுப்பாக சமைக்கவும் பயன்ப்படுத்துமாறு "விளக்கடுப்பு"(lanstove' (lantern combined with cook stove)வடிவமைத்துள்ளார்கள்.எனவே மின்சாரம் ,கேஸ் என இல்லாதவர்கள் வீட்டில் விளக்கெறியும் போதே சமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் நிறைய மீதம் ஆகும், கிராமப்புற மக்களுக்கு செலவும் குறையும்.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள மின் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் விலை எப்போது வேண்டுமானாலும் ஏற்றப்படலாம் எனும் நிலையைக்காணும் பொழுது நாமும் ஒரு "விளக்கடுப்பு" வாங்கி வைத்துக்கொள்வது லாபகரமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

*******

பாட்டொன்று கேட்டேன்.



மீண்டும் ரியல் தல "சூப்பர் ஸ்டாரின்'" எளிமையான நடனத்துடன் ,எப்பொழுதும் அசத்தும் ஒரு பாடலின் காணொளி.இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் இப்பாடல் இடம்ப்பெற்றுள்ளது.


-----------------------

பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,யூடியூப், cnn-ibn news. இணைய தளங்கள் நன்றி!

*******