Sunday, September 16, 2012

கற்றது தமிழ்-3


ஆலோசனை(aalochaya)

வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல்,

ஆச்சர்யம்(aashcharyam)

வடமொழி சொல், -surprise எனப்பொருள்,

இணையான தமிழ்ச்சொல்:

வியப்பு,திகைப்பு,

அபிப்பிராயம்(abhipraaya)

வடமொழிச்சொல், -opinion எனப்பொருள் வரும்,

இணையான தமிழ்ச்சொல்:

கருத்து, கூற்று,கணிப்பு,

அலங்காரம்.

alangkar -alankrita- என வடமொழிச்சொல்லில் இருந்து உருவானது ,decorated எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

ஒப்பனை,அழகூட்டிய,

மேக்-அப்: ஒப்பனை, அழகுக்கலை ,

அலட்சியம்(alakshmaana)


வடமொழி சொல், disregard எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

கவனமின்மை, கவனியாமை,பொருட்படுத்தாமை, பொருட்டில்லை,புறந்தள்ளல்.

அல்பம்(alpam)

வடமொழிச்சொல் ,small எனப்பொருள்.

இணையான தமிழ் சொல்:

சிறிய, குறைவான, அல்பாக நடந்துக்கொள்வது என்றால் சின்னத்தனமா, வடிவேல் பாஷையில் சொன்னால் "சின்னப்புள்ளத்தனமா" :-))

தகுதிக்கு குறைவாக , கீழ்த்தரமாக நடந்துக்கொள்வது என சொல்லலாம்.

அங்கம்(angam)

வட மொழிச்சொல், body எனப்பொருள்:

இணையான தமிழ்ச்சொல்:

உடல்,உறுப்பு,அவயம், பகுதி,

அங்கன் என்றால் கவனிப்பு என்றும் பொருள் உண்டு, அங்கன்வாடி என வடமொழியில் சிறார் பள்ளியை சொல்லக்காரணம், குழந்தைகள் கண்காணிப்பகம்,காப்பகம் என்ற பொருளில் தான்.

அங்காடி என்ற சொல்லுக்கு திறந்த வெளியில் வியாபாரம் செய்வதே பின்னர் பொதுவாக கட்டிடத்தில் வியாபாரம் செய்தாலும் "கடை" எனத்தமிழில் பொருள் கொள்ளப்பட்டது., ஆனால் அங்காடி என்ற சொல் தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கனடா, துளு ஆகிய திராவிட மொழியிலும், மராத்தியிலும் உள்ளது.

கேரளாவில் உள்ள கொச்சினின் இயற்பெயர் கொச்சங்காடி அதாவது "சின்னக்கடை" அக்காலத்தில் கடல் வழி வாணிபம் அங்கு சிறிய அளவில் நடக்க ஆரம்பித்த போது வைத்த பெயர்.பின்னாளில் மருவி கொச்சின் ஆயிற்று. இப்பொழும் ,அங்கு அங்காடி என்ற பெயரில் சிறிய கிராமம் உள்ளது.

(ஹி...ஹி ...கொச்சின் குயினு)

கர்நாடகாவிலும் அங்காடி என்ற பெயரில் கிராமம் உள்ளதாம்.

மராத்தி தவிர மற்ற மொழிகளில் கடை என்ற பொருள் உள்ளது, மராத்தியில் மேல் அங்கி என்று பொருள். எனவே அங்காடி தமிழ் சொல் ஆக இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது.

அநாதை(anaatha)

வடமொழி சொல், no help,no patron உதவிக்கு ,அல்லது கவனிக்க யாரும் இல்லாதவர் எனப்பொருள்.

நாதன் என்றால் தலைவன், அ-நாத என்றால் தலைவனாக யாரும் இல்லை, இதன் பொருள் ஒரு குடும்பம், குழுவில் இல்லாமல் தனித்து விடப்பட்டவர் என்பதாகும்.

எனவே தமிழில்,

திக்கற்றோர், தனி மனிதன், தனிக்கட்டை, உதவியற்றவன், உற்றார் இல்லாதவன், சொந்தமில்லாதவன், பற்றற்றவன், எனலாம்.

அகதி:

வட மொழி, நிலையில்லா எனப்பொருள்.

கதி- நிலை, பதம்,நேரம்,வேகம் எனப்பல பொருள் உண்டு.

அ என்றால் இல்லை, எனவே அகதி என்றால் நிலையான இடம்,அல்லது இடைப்பட்ட ஒரு நிலையில் இருப்பது.

இணையான தமிழ்ச்சொல்:

நாடோடி, புலம்பெயர்ந்தோர்,நிலையற்றவர் எனலாம்.

அதோகதி.

வட மொழிச்சொல், descend எனப்பொருள்.

அதோ என்றால் சரிதல், இறங்குதல்,கதி என்றால் நிலை,

இணையான தமிழ்ச்சொல்:

வீழ்தல், வீழ்ச்சியடைதல், இறங்குமுகம்,கீழான நிலையை அடைதல்.,நலிவுறுதல் எனலாம்.

வேலைப்போச்சுன்னா உன் கதி அதோகதி என சொல்வதுண்டு, அப்படியானால் இப்போது இருக்கும் நிலை-வசதி ,எல்லாம் இழக்க நேரிடும், கீழான ,எளிய வாழ்க்கைக்கு போக வேண்டி வரும் என சொல்வதாகும்.

நிர்க்கதி:

வடமொழி, நிர் என்றால் இல்லை, அழித்தல் , கதி- நிலை, எனவே கதியில்லை எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்,

வேறு வழியில்லை, நிலையில்லை, கையறு நிலை, பற்றற்ற நிலை,எங்கே போவது என்ன செய்வது அறியா நிலை என்பதை சுருக்கமாக "செய்வதறியா நிலை" எனலாம்.


அனுபவம்(anubhava)

வடமொழிச்சொல், experience எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

அனுபவசாலி- பயிற்சிப்பெற்றவர்,தேர்ச்சியுள்ளவர், பழக்கமுடையவர்,
பயிற்சி, அறிவு எனவும் பொருள் கொள்ளலாம்.

அனுமதி(anumathi)

வடமொழிச்சொல், permission எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:
அழைப்பு ,அழைத்தல்,நுழைவு,கடவு,உள்நுழை, என சொல்லலாம்.

அனுசரணை(aNusaranai)

வடமொழிச்சொல், adjust,acompany, எனப்பொருள்,

இணையான தமிழ்ச்சொல்,

அனுசரணை= இசைவு, அனுசரிப்பு- இசைந்து போதல், ஒற்றுப்போதல், சேர்ந்தியங்கல்.ஒருங்கிணைந்து செய்தல்,கூட்டாக இருத்தல்,ஒற்றுமையாக இருத்தல்.

அநியாயம்(anyaayena)

வடமொழிச்சொல் -illegal எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்,

சட்டத்திற்கு புறம்பான,முறையற்ற,பண்பற்ற, முறைகேடாக, வழமைக்கு மாறாக, என சொல்லலாம்.

அக்கிரமம்(akrama)

வட மொழிச்சொல்- illegal,unlawful எனப்பொருள் தரும் சொல்லே.

இணையான தமிழ்ச்சொல்,

முறைகேடு,சட்டத்திற்கு மாறாக,விருப்பமில்லா, விருப்பத்திற்கு மாறாக,வரம்பு மீறிய, வரிசையின்றி,ஒழுங்கின்றி, ஒழுங்குமீறிய என சொல்லலாம்.

கிரமம்- வரிசை, அக்ரமம்- வரிசையின்மை.

akrama-sakrama bill என கர்நாடக மாநிலத்தில் ,பெங்களூரு மாநகர வளர்ச்சி குழுமம் ஒரு சட்டம் இயற்றி எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது,அதாவது அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் சட்டம்.

நீதி:

வடமொழி சொல்லே , ஜஸ்டீஸ் எனப்பொருள்.

நீதி,.நீதிமான் என்றெல்லாம் வட மொழியில் உண்டு.

தமிழில் , ஒழுக்கம், ஒழுகலாறு, மாண்பு,சட்டம்,வழக்கு,என சொல்லலாம்.

நீதி மன்றம்- வழக்காடு மன்றம்.

அட்வகேட்- வழக்குறைஞர்,

லாயர்- வழக்கறிஞர்.

மரியாதை:

மர்யாதா என்ற வட மொழி சொல்.

இணையான தமிழ்ச்சொல்:

கொள்கை, நேர்மை, மாண்பு, ஒழுக்கம் என சொல்லலாம்.

இதிகாச நாயகன் ராமனுக்கு மர்யாத புருஷோத்தம ராமா எனப்பட்டப்பெயர் உண்டு.

தெலுகில் மரியாத ராமண்ணா கதைகள் என , தெனாலி ராமன் போல கதாபாத்திரத்தின் அடிப்படையில் கதைகள் உள்ளது.


--------------------

அறிவுக்கடல் என்ற பதிவர் சில "மெட்ராஸ் பாஷை" சொற்களுக்கும் விளக்கம் கேட்டார், தெரிந்த வரையில் ஒரு விளக்கம் தருகிறேன்.

இஸ்த்துகினு:

இழுத்துக்கொண்டு என்ற பொருள், இழு என்பது தமிழ் சொல் தான் என்ற போதிலும், இசு என்பதும் தமிழ் தான். இசுத்தல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் தரும்.

பிசு ,பிசுத்தல் ஒட்டுதல், பிசுக்குதல் என்றால்அழுத்தி வெளியேற்றல் என பொருள் தரும் தமிழ் சொற்கள் உள்ளதை கவனிக்கவும்.

ஜகா வாங்குதல்:

ஜகா என்ற வட மொழிச்சொல்லுக்கு விழிப்பு, என ஒரு பொருள் இருக்கிறது.

எனவே ஜகாவாகிட்டான் ,அதாவது விழித்துக்கொண்டான் என்ற பொருளில் சொல்லப்பட்டு பின்னர் மருவி இருக்கலாம்.

ஒருவரை ஒரு வேலைக்காக கூட வர சொல்லி அழைத்து கடைசி நேரத்தில் வரவில்லை என சொல்லும் போது பெரும்பாலும் திடீர்னு ஜகா வாங்கிட்டான் என சொல்வதுண்டு அல்லவா.

ஏன் எனில் இந்த வேலைக்காக இவன் கூட நாம போன நமக்கு என்னப்பயன் அல்லது பிரச்சினை வரலாம் என கடைசி நேரத்தில் ஒரு விழிப்பு வந்து விலகுவதனால் அப்படி சொல்வது பொருத்தமே.

ஜகச்ஜால கில்லாடி என சொல்வதும் இதனால் தான்,

ஜகா -விழிப்பு, ஜாலம் -வித்தை, அதாவது பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நம் முன்னால் ,நமக்கு தெரியாமல் செய்வது, மேஜீக் செய்வபவர்கள் நம் கண் முன்னால் நம்மை ஏமாற்றுவது போல.

இதனை வழக்கத்தில் எளிமையாக கண்கட்டு வித்தை என்பார்கள், விழிப்புடன் இருக்கும் போதே கண்ணை கட்டியது போல செய்வது...

ஆகா இப்பவே கண்ணக்கட்டுதே அவ்வ்வ் :-))

அப்படின்னும் சொல்லலாம்!

உஷார்:

உஷா- என்றால் வட மொழியில் விடியல், உஷாஸ் என்பவர் விடியலின் தேவதை, உஷத் காலம் என அதிகாலையை சொல்வது வழக்கம்.

உஷார் என்றால் விழித்துக்கொள், விழிப்பாக இரு எனப்பொருள்.

அக்காலத்தில் கோட்டையை காப்பவர்கள் சுற்றிலும் காவலுக்கு இருப்பார்கள் ,அவர்கள் தூங்காமல் இருக்க மணிக்கொரு ஒருத்தார் பாரா உஷார்னு சொல்லிக்கொண்டு ஒரு ரவுண்டு போவது வழக்கமாம். அதாவது காவல் காப்பவர்கள் விழிப்புடன் இருக்கணும், தூங்கிட்டு இருந்தாலும் முழித்துக்குவாங்க :-))

ராத்ரி- வடமொழி,
இரவு -தமிழ்
அர்த்ஹராத்ரி- நள்ளிரவு.

பேஜார் (bezar,bezaar):

கோவம்,டென்ஷன் ஆவது, பேஜார் பார்ட்டி என்றால் எதற்கெடுத்தாலும் கோவமாவது, பேஜாராகீது என்றால் டென்ஷனா இருக்கு என சொல்வது.

அதே சமயம் பேஜார் என்பதற்கு இன்னொரு பொருள் விலை மாது, பஜாரி என்று சொல்வது பேஜார் என்பதில் இருந்து வந்ததே.

நாஸ்த்தி:

ஆஸ்தி என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம், சொத்து ,அல்லது பொருள் இருப்பது, நாஸ்தி என்றால் எதுவும் இல்லை, இதில் இருந்து தான் நாஸ்த்திகம் -நாத்திகம் என்ற சொல் வந்தது ,அதாவது கடவுள் இல்லை என்பது.

நாஸ்தி பண்ணிடுவேன் என்றால் அழித்துவிடுவேன் என்பது.

கலீஜ் பார்ட்டி:

கலீஜ் என்ற அரபிய சொல்லுக்கு வளைகுடா, கடற்புறம் எனப்பொருள், சவுதி அரேபியாவில் கலீஜ் டைம்ஸ் என ஒரு செய்தித்தாள் உண்டு.அங்கு இருக்கும் ஊருக்கும் கல்லீஜ் எனப்பெயர்.

அப்போது முகலாயர்கள் இந்தியாவுக்கு நாடுப்பிடிக்க வந்தப்போது அவர்களை கலீஜ் நபர்கள் எனக்குறித்து இருக்கலாம்,மேலும் முரட்டுத்தனமானவர்களாக வேறு இருந்ததால் அப்படி இருப்பவர்களை எல்லாம் கலீஜ் என சொல்வது வழக்கமாக இருக்கலாம்.

இப்போது அழுக்கா, முரட்டுத்தனமா நடந்துக்கொள்பவர்களை கலீஜ் பார்ட்டி என சென்னை தமிழில் அழைக்கப்படுகிறார்கள்.

பாடாவதி பார்ட்டி:

பாடத்தெரியாத ஆள் என பொருள் அல்ல, படா- பெரிய, அவதி - தொல்லை, இம்சை,

பாடாவதி என்றால் பெரிய தொல்லையான ஆள் :-))

இன்னும் நிறைய சொற்கள் உண்டு படிப்படியாக பட்டியலிடுகிறேன்.

பின்னூட்டத்தில் உங்களுக்கு பொருள் தெரியவேண்டிய சொற்கள், குறிப்பிட்டால் முடிந்த வரையில் தேடி பொருள் கூறுவேன், மற்றும் தெரிந்த மாற்று சொற்களை கூறினால் அடுத்து வரும் இடுகையில் பயன்ப்படுத்திக்கொள்வேன்.நன்றி!

--------------
பின் குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி:

கூகிள், விக்கி,தமிழ் இணையப்பல்கலை, மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,அகரமுதலி,மேலும் பல இணைய தளங்கள்,நன்றி!
***************