Thursday, February 07, 2013

கற்றது தமிழ்-5

(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்)

தமிழென நினைத்து  பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,பிறமொழிச் சொற்களைப் நாம் பயன்படுத்தி வருகின்றோம்,அவற்றில் பல தமிழாகவே மாறிவிட்ட சூழலில் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் கடினமாகும்,அதே வேளையில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் உள்ளன,அவற்றை  அடையாளங்காணும் சிறு முயற்சியே இத்தொடர்.

இப்பதிவில் நாம் அதிகம் பயன்ப்படுத்தும் மேலும் சில வடமொழி ,பிறமொழி சொற்களையும்,அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் காணலாம்.

#அகதி:

ஒரு சொல்லின் முன் "அ" சேர்ப்பதால் எதிர் மறை பொருளை உருவாக்கலாம், இம்முறை வடமொழி,தமிழ் என இரண்டிலும் நடைமுறையில் உள்ளது.

கதி(gati) என்ற வடமொழிச் சொல்லுக்கு ,

நிலை,
இடம்,
இலக்கு,
நுழைவு,
சரணடைதல்,
புகலிடம்,
நேரம்,
வேகம்,
இயக்கம்,
நகர்தல்.

என்றெல்லாம் பொருள் உண்டு.

சொல்லுக்கு முன் "அ"  சேர்த்தால் இவற்றிற்கு எதிரான பொருள் கொண்ட சொற்களை உருவாக்கலாம்.

அகதி என்ற சொல்லினை கொண்டு ,
யாருமற்றவன்,வறியவன்,நாடோடி,பற்றில்லாமல்,புகலிடம் இல்லாமல் இருப்பவர்களையும் குறிக்கலாம்.

மேலும் அகதி என்பதற்கு  திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.

அகதி என்பதற்கு தமிழ் இணைச்சொற்கள்: நாடோடி ,நாடற்றவர் ,புலம் திரும்பியோர் என்பதை கொள்ளலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated" என்பதையே குறிக்கும்.

#அகாலம்- 

காலம் என்ற வடமொழிச்சொல்லுக்கு நேரம் என்று பொருள், எதிர்மறையாக "அகாலம்" என்கிறார்கள்  இதற்கு இணையான தமிழ்ச்சொல் "நேரமற்ற நேரம்",வேளையற்ற வேளையில் எனலாம்.

அகாலநேரம் என்பது ,நடு சென்டர் என்பது போல இருமுறை நேரத்தினை சொல்வது.

#அங்குலம் : 

வட மொழிச்சொல், அங்குஷ்டம் என்றால் வட மொழியில் கட்டைவிரல் , ,எனவே ஒரு கட்டைவிரல் தடிமன் உள்ள அளவை அங்குலம் என்பார்கள்.
இணையான தமிழ்ச்சொல்: விரற்கடை அளவு.

#அஜாக்கிரதை

ஜாக்கிரதை என்ற வட மொழிச்சொல்லின் எதிர்ச்சொல்,

இணையான தமிழ்ச்சொல் : கவனமின்மை,விழிப்பின்மை.

# அசுத்தம்-

சுத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்,

இணையான தமிழ்ச்சொல்: அழுக்கு,தூய்மையின்மை.

#அநியாயம்:

நியாயம் என்ற வடச்சொல்லின் எதிர்ப்பதம்.

இணையான தமிழ்ச்சொல்:முறையின்மை,நடுவின்மை.

#அபத்தம்:

பத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்.

பத்தம் என்றால் நேர்மை, உண்மை, எனப்பொருள். சுத்தபத்தமாக கடவுளை வணங்க வேண்டும் என்றால் ,தூய்மையாக ,நேர்மையாக ஒன்றி வணங்குதலை குறிக்கும்.

இணையான தமிழ்ச்சொல்: பொய்,தவறு.

#இலவசம்:

labhasa என்ற வட மொழி சொல்லுக்கு , பிச்சையாக, தானமாக கேட்டுப்பெறுதல் என்ற பொருள் ஆகும்.  தமிழில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் சொல்லின் முதல் எழுத்தாக பயன்ப்படுத்தக்கூடாது என்பதால், உயிர் எழுத்து "இ" சேர்த்து இலவசம் என முழுமையாக தமிழில் எழுதப்படுகிறது.

உ.ம்: லட்சுமணன் = இலட்சுமணன், ராமன் = இராமன்.

தமிழில் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ,பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும் வரலாம், அதுவல்லாமல், மெய் எழுத்துக்களில் ,க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து மெய்யெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரலாம்.

இலவசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்:விலையின்மை,விலையில்லா என்பதாகும்.

ஹி...ஹி முந்தைய முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் கொடுத்த இலவசப்பொருட்களை இப்பொழுது விலையில்லா பொருட்கள் என சொல்கிறார்கள். சரியாத்தான் மாற்று சொல் கண்டுப்பிடித்து இருக்காங்க :-))

# கோயில் அல்லது கோவில்:

பலரும் ஆலயத்தினை கோயில் அல்லது கோவில் என எழுதி,பேசி வருவதுண்டு, இரண்டில் எது சரியான தமிழ்ச்சொல் என குழப்பம் வருவது இயல்பே.

தமிழ் இலக்கண புணர்ச்சி விதிகளின் படி, நிலை மொழி இறுதியிலும்,வரு மொழி முதலிலும் உயிர் எழுத்து இருக்குமானால் , இரு சொற்கள் இணையும் போது ஒற்றெழுத்து மிகும், என்கிறது, இதனை உடம்படுமெய் - உடன் படுத்தும் - இணைக்கும் மெய் எழுத்து என்கிறார்கள்.

மேலும் நன்னூல் இலக்கணப்படி,

இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் இருப்பின் யகர ஒற்று "ய்"மிகும்.

ஏனைய உயிர் எழுத்துக்கள் இருப்பின் "வகர" மெய் "வ்" மிகும்

ஏ எனும் உயிர் எழுத்து இருப்பின் இவ்விரு மெய்யும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

கோவில் = கோ +வ்+இல்

கோ என்ற சொல்லில் "ஓ"எனும் உயிர் எழுத்து ஒலிக்கிறது அதற்கு வகர மெய்"வ்" உடம்படுமெய் ஆக மிகலாம்.

எனவே கோவில் என்பதே சரியானது.

கோயில் =கோ+ய்+இல்

எனப்பிரித்தால் யகர ஒற்று "ய்" மிகுவதை காணலாம், இது உடம்படுமெய் என்ற விதிப்படி சரி,ஆனால் நன்னூல் விதிப்படி தவறு என்கிறார்கள்.

அதே சமயத்தில் இலக்கியங்களில் கோயில் என்ற சொல்லும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது,எனவே நடைமுறையில் கோயில் என்று சொல்வதும் பிழையில்லை.


மேலும் சில ஒலி ஓசையில் ஒத்து குழப்பும் சொற்கள்.

முருக்கு- முறுக்கு:

முருக்கு என்றால் அழித்தல்.

முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு,  ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு" எனலாம் :-))

ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு" தான் பயன்ப்படுத்த வேண்டும்.

#ஒரு-ஒறு:

ஒரு என்பது எண்ணிக்கை ஒன்றை குறிக்கும்.

ஒரு ரூபாய், ஒருவன்,ஒருவள்.

ஒறு என்பது தண்டனையை குறிக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்ற குறளில் வரும் ஒறுத்தல் "தண்டிப்பதையே" குறிப்பதை காணலாம்.

#முன்னாள்-முன்னால்-முந்நாள்

இன்றைய நாள் - இன்னாள், அதற்கு முன்னர் வந்த நாள் முன்னாள்,அல்லது முந்தைய காலம்.

ex.minister என சொல்ல முன்னாள் ,முன்னால் என எதனை பயன்ப்படுத்துவது எனக் குழப்பம் வரும்.

முன்னால் அமைச்சர்  என்றால் இந்த ஆட்சிக்காலத்துக்கு முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அல்லது இப்போதைய அமைச்சருக்கு முன்னர் அமைச்சராக இருந்தவரை மட்டுமே குறிக்கும்.
முன்னால் என்றால் in front of, previous என்ற பதம் இங்கு நாள் கணக்கில் வராது.ஒரு வரிசைக்கிரமத்தில் சொல்வதாகும்.

உ.ம்.
#முன்னால் நிற்கும் பேருந்தில் ஏறவும்.

#முன்னால் நிற்கிறேன்.

அதையே முன்னாள் நிற்கிறேன் என்றால் முதல் நாள் நிக்கிறேன் ஒரு வேளை முதல் நாளில் இருந்து நின்றால் அப்படி சொல்லலாமோ :-))

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்து இப்போ பதவியில் இல்லை என்றால் என்ன செய்வது, எனவே முன்னாள் அமைச்சர் என எழுதுவதே சரியானது.

முந்நாள் என சொல்வது மூன்று +நாள் என சொல்வதாகும்,

மூன்று நாள் =முந்நாள்.

# அல்லு-அள்ளு:

அல் - துன்பம்,தீமை,இரவு,இருள்.

அல்ல- இல்லை

அல்லல் ,அல்லவை,

சிலர் அல்லும் பகலும் வெறும்* தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்பார்.

இங்கு அல் என்பது இரவை குறிக்கிறது.

*வெரும்- வெருப்பு- அச்சம்,பயம்,மிரட்சி.கோவம்,சினம் எனவும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்.

வெறும் - வெற்று-வெற்றிடம்- ஒன்றுமில்லாமல்.

வெறுப்பு- dislike -hate,பகைமை, விருப்பமின்மை.

அள்ளு- அள்ளுதல், ஒன்றை அப்படியே வாரி எடுப்பது. மண் அள்ளுதல், தானியம் அள்ளுதல்.

ஹி...ஹி தெலுகுல அல்லுனா மாப்பிள்ளை என்கிறார்கள்(தெலுகு தெரிந்தவர்கள் சரியானு சொல்லுங்க), "அல்லுடு மஜாக்கானு"சிரஞ்சீவி ஒரு படம் கூட நடித்துள்ளார், ஒரு வேளை மாப்பிள்ளைகள் மாமனாரை வரதட்சணை,சீர் எனக்கேட்டு துன்புறுத்துவதால் மாப்பிள்ளையை "அல்லு"னு சொல்லுறாங்களா?

உதித்நாரயணன் போன்று மூக்கால் பாடுபவர்களுக்கு  எல்லாமே அல்லு அல்லு ...தல்லு ...தல்லு தான் :-))

#ஆனி-ஆணி:

ஆனி என்பது தமிழ்நாட்காட்டியில் உள்ள தமிழ் மாதமாகும்.

ஆணி என்பது வடிவேலு சொல்லும் "ஆணியே புடுங்க வேண்டாம்' இரும்பு ஆணி :-))

ஆணி என்ற சொல்லுக்கு இரும்பு ஆணி, வலிமை, இன்றியமையாத(முக்கியமான) என்ற பொருள்கள் உண்டு.

மரத்தின் ஆணி வேர்.

ஆணித்தரமாக கருத்தினை *கூறுதல்.

ஆணி என்பதற்கு இங்கு அழுத்தமாக ,வலிமையாக கருத்தினை சொன்னதாக பொருள்.

கூரு- கூர்- sharpness,கூரு கெட்டவன் என்றால் மொக்கையான மூளைத்திறன் உள்ளவர்னு சொல்றாங்க போல.

*கூறு,கூறல் - சொல்,சொல்லுதல்.

 ஒலிக்குறிப்பில் குழப்பும் மற்ற சொற்களை பிறகு பார்க்கலாம்.



மேலும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

#அதிகம், வடமொழி , தமிழ் -மிகுதி,கூடுதல்.

#அதிசயம், வடமொழி, தமிழ் -புதுமை,வியப்பு.

#அஸ்திபாரம்:கடைக்கால்

#அலுவா- கோதுமை தேம்பாகு.

#அவகாசம்-ஒழிவு,ஓய்வு.

#அவசரம்-விரைவு, பரபரப்பு,பதைப்பு.

#அவசியம்- முதன்மை,கட்டாயம்,இன்றியமையாத

#ஆதிக்கம்-உரிமை,முதன்மை,மேன்மை,தலைமை.

#இதம்,ஹிதம்- இனிமை,நன்மை,அன்பு,அறம்.

#இருதயம்,ஹிருதயம்-நெஞ்சம்,அன்பு,உள்ளம்.

#கட்சி-பக்கம்,சார்பு.

#எதார்த்தம்-உண்மை,உறுதி

# கஷ்டம்- வருத்தம்,துன்பம்

#நிசி -இரவு

#தாமசம்,தாமதம்-தாழ்த்துதல்,அட்டி,மயல்.

#துரிதம்-விரைவு

#நிர்ப்பந்தம்-தொல்லை,நெருக்கடி,வலுக்கட்டாயம்,இடர்.

#நிரூபித்தல்- மெய்ப்பித்தல்,நிலைப்பெறுத்தல்.

# வாந்தி பேதி,- கக்கல்,கழிசல்
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,தமிழ் ஆட்சி சொல்லகராதி, தமிழ் அகரமுதலி,http://spokensanskrit.de/,கூகிள்,விக்கி, இணைய தளங்கள்,நன்றி!