Sunday, March 31, 2013

என்ன கொடுமை சார் இது-12



(இந்த கொடுமைய பத்திலாம் மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுக்க முடியாதா,அவ்வ்,ஹி...ஹி)

# இது தப்பா சார்?

(ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் அதிகாரிக்கும் ஊழியருக்குமிடையே நடைப்பெற்ற கற்பனை உரையாடல்)

அதிகாரி சார் ,கொஞ்சம் நில்லுங்க ,எனக்கு ஒரு டவுட்டு ,அதை உங்களால மட்டும் தான் கிளியர் செய்ய முடியும்..

என்ன கோந்த்சாமி ,காலையிலே உனக்கு டவுட்டா, உன் கடமை உணர்ச்சியை நினைச்சா ,கண்ணு கலங்குது, கேளு..கேளு, உன்னப்போல ஒரு சின்சியர் பெர்சனுக்கு உதவலைனா அப்புறம் என்ன அதிகாரி நான்.

நீங்களே சொல்லுங்க சார், ரேஷன் கடை கெவர்மெண்டு கடைத்தானே?

ஆமாய்யா அதுல என்னா சந்தேகம்?

அப்போ கெவர்மெண்டு கடையில நான் பொருள் வாங்கினா தப்பா சார்?

எவன் சொன்னான்,தப்பேயில்லை.

ஆபிசுக்கு வரும் போதே  வழியில ரேஷன் கடையில வீட்டுக்கா நான் வாங்கின சக்கரைய ஆபீஸுக்கு எடுத்து வந்தா தப்பா சார்?

ச்சே ...ச்சே தப்பேயில்ல ஒனக்கு நல்ல குடும்ப பொறுப்பு இருக்குபா, குட் கீப் இட் அப்!

அந்த சக்கரையில டேஸ்ட் பார்க்க கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டா தப்பா சார்?

இதுல என்ன தப்பிருக்கு ,நீ காசுக்கொடுத்து வாங்கின சர்க்கரை...நீ கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்கிட்டா என்ன ,மூக்கில போட்டுக்கிட்டா என்ன, எல்லாம் உன் இஷ்டம்யா.

அப்புடி சொல்லுங்க சார், உங்களை தவிர இங்கே யாருக்குமே அறிவில்ல சார்.

ஹி...ஹி தாங்க்ஸ் ,ரொம்ப நல்லவன்யா ...அதான் என்னப்பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீ எதோ வேலை செஞ்சிட்டிருந்த போல ,சின்சியர் கய் ,யூ கேரி ஆன்!

நீங்க உங்க ரூமுக்கு போங்க சார், நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்.

(குவார்ட்டர் புட்டியை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்)

யோவ் என்னய்யா ,வேலையை ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டு ,சரக்க எடுக்கிற? அதுவும் ஆபீஸ் டைம்ல?

சார் சரக்கு கடையை கெவர்மெண்டு தானே நடத்துது?

ஆமாம்...அதுக்குன்னு.

அப்போ சரக்கும் சக்கரைப்போல கெவர்மெண்ட்டு பொருள் தானே...

ம்ம்...ம்ம் அப்படியும் சொல்லலாம்ம்ம்...ஆனா

என்ன நோனா, கெவர்மெண்டு பொருள் தான் சார், நான் வீட்டுக்கு எடுத்து போறதுக்காக வரும் போதே வாங்கிட்டு வந்தேன், காசு கொடுத்து வாங்கின கெவர்மெண்டு பொருளை வச்சிருக்கிறது தப்பா சார்?

ச்சே சே தப்பேயில்ல, ஆமாம் வீட்டுக்கு எடுத்து போகத்தானே ,வச்சிக்க ,வச்சிக்க ....

ஆனால் கொஞ்சமா டேஸ்ட்  பார்க்க வாயில ஊத்திப்பேன்... நீங்களே சொல்லி இருக்கீங்க, நாம காசுக்கொடுத்து வாங்கின பொருளை டேஸ்ட் பார்க்க நாம சாப்பிட்டா தப்பில்லைனு... இப்போ சொல்லுங்க  , இது தப்பா சார்?

ஙே ...நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே ...அவ்வ்.

டேஞ்சரஸ் ஃபெல்லோ இனிமே இவங்கிட்டே உஷாரா இருக்கணும் ,பீ கேர் ஃபுல்!

என்ன சார் என்னமோ சொன்னிங்களே?

நான் என்னைய சொல்லிக்கிட்டேன், வர்ரட்டா!

(ஹி...ஹி ரொம்ப கொடுமையான எதாவது செய்தி சொல்லணும்னு நினைச்சேன் அப்படி எதுவுமே சிக்கலை, அதான் இப்புடி ஒரு மொக்கையை போட்டேன், நம்ம மொக்கையை விட லோகத்திலே பெரிய கொடுமை உண்டுங்களாண்ணா?)

என்ன கொடுமை சார் இது!

--------------------

# வரிவிலக்கு அரசியல்!




சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தினை சேர்ந்த பள்ளிமாணவன் "ஹிதேந்திரன்" இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து ,பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் உடலுறுப்பு தானம் குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் டிராபிக் என்ற படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது,எப்பவுமே நம்ம ஊரு சரக்குக்கு நம்ம ஊரில் மதிப்பிருக்காது,அதே சரக்கு வெளியூருக்கு போயிட்டு வந்தால் மதிப்பு அதிகமாகிடும்,அதே போல "மலையாள "டிராபிக்" படமும்  தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்றப்பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படமும் சுமாரா இருக்குனு கேள்வி. இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே, இதுல என்ன கொடுமையா இருக்குனு கேட்கிறிங்களா ? இருக்கு .

தமிழில் பெயர் வைத்து,தமிழ் கலாச்சாரத்துடன் உள்ள தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தமிழகத்தில் உண்டு. ஆனால் இந்த வரிவிலக்கு சென்னையில் ஒரு நாள் தமிழ்ப்படத்துக்கு கொடுக்கப்படவில்லை.

படத்தின் தலைப்பு தமிழில் தான் இருக்கு ,கதையும் கலாச்சாரச்சீர்கேடாக இல்லை, உடலுறுப்பு தானம்னு நல்ல செய்தி தான், சரி ரீ மேக் என்பதாலா என்றால் ஏற்கனவே பல ரீமேக் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

படத்தை தயாரித்தது ராதிகா ஷரத்குமாரின் "ரேடான் டீவி" , ஷரத்குமார் இரட்டை இலையில மூன்றாவது இலையா ஒட்டிக்கிட்டிருக்கிற அரசியல் தலைவர், அப்படி இருந்தும் ஏன் கேளிக்கை வரிச்சலுகை இல்லைனு பார்த்தால், ஹி...ஹி படத்தை வாங்கி வெளியிட்டு இருப்பது சன் பிக்சர்ஸ் ,அப்படிப்போடு அருவாள, ஏற்கனவே கழக குடும்பத்தார் தயாரித்த திரைப்படங்களான ஏழாம் அறிவு, ஓகே.ஓகேவுக்கும் கூட வரிச்சலுகை பிரச்சினை உண்டானது. இப்போ சென்னையில் ஒரு நாளுக்கு.

சன் பிக்சர்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் செய்து அரசியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், அதற்காக இப்பொழுது ,உடலுறுப்பு தானம் எனும் ஒரு நல்ல கருத்தாக்கத்துடன் வந்துள்ள சென்னையில் ஒரு நாள் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி இல்லாமல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர், இப்படத்திற்கு அரசியல் செய்யாமல் விரைவில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டால் கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஓடும் வாய்ப்புள்ளது.

(இனியா-மலையாள படங்களில் இயல்பான "திறமையை" காட்டுபவர் சென்னையில் ஒரு நாளிலும் நடித்துள்ளார்)

அரசியல் வாழ்க்கை ஒரு வட்டம் மேல இருப்பவர் கீழ வருவதும்,கீழ இருப்பவர் மேல போவதும் இயல்பே, ஆனால் மேலிர்ந்தவர் கீழ வந்ததும் மேல சென்றவர் பழி வாங்காமல் நடந்து கொள்வதே அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரீகம் என்ற சொல்லே வழக்கொழிந்து விடுமோ எனும் நிலையில் தமிழகம் உள்ளதை நினைத்தால் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என அரசியல் நீதி சொன்ன தமிழகமா இது என கேள்வி எழும்புகிறது!

என்ன கொடுமை சார் இது!

------------------

#காவல் துறை உங்கள் நண்பன்!

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் எல்லாம் ஹோலி கொண்டாடி இருக்காங்க, அட இந்தியா முழுக்க கூட கொண்டாடினாங்க அதுக்கின்னா இப்போனு கட்டைய போடாம கொஞ்சம் கவனியும் மக்களே,

ஹி...ஹி  வழக்கமா ஹோலிய சாக்கா வச்சு பயப்புள்ளைங்க ,பொண்ணுங்க மேல சாயம் பூசுறேனுனு தடவுறதுலாம் கூட நடக்கும் ,அதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான்னு விட்றலாம்.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதா பாத் நகரை சேர்ந்த "புத் பஜார் தானா காவல் நிலையத்தில்" பணிப்புரியும் சிலப்போலிசாருக்கும் ஹோலி கொண்டாடினா என்னனு ஆசை வந்திருச்சு ,ஆனாப்பாருங்க அன்னிக்கும் அவங்களுக்கு டியூட்டி ,அதுக்குனு ஹோலி கொண்டாடாம விட்ற முடியுமா,சாமி குத்தமாகிடாது? ஒரு தடவை முடிவு செய்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம்னு உ.பி காவலர்கள் காவல் நிலையத்திலேயே ஹோலி ஹே ஹோலினு கொண்டாடி இருக்காங்க, அடக்கொண்டாட்டம்னா சரக்கு இல்லாமலா, அதுவும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஹோலினா வியாபாரிகள் தாராளமா ஸ்பான்ஸ்ர் அள்ளி விட்டிருப்பாங்க, எனவே எல்லாம் இஷ்டத்துக்கு தீர்த்தத்தை பருகிவிட்டு ஆனந்த பரவசமாகி ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து "சகலகலா வல்லவனா" குத்தாட்டம் எல்லாம் போட்டுள்ளார்கள், சிலர் சரக்கு புட்டியை தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலேனு இந்தியில் பாடி கெரகாட்டம் எல்லாம் ஆடி அசத்தியுள்ளார்கள்.

உ.பி காவலர்கள் ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல நாம மட்டும் தீர்த்தம் சாப்பிட்டு இன்பம் துய்த்தால் போதுமா நாளைய சமுதாயமாம் இளைஞர்களும் இன்பம் துய்க்க வேண்டாமா என கரிசனத்துடன், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்களை கூப்பிட்டு சரக்கு கொடுத்து குடிக்க சொல்லி இருக்காங்க, உ.பி மாணவர்கள் உருப்படாதவர்கள் போல சரக்கெல்லாம் குடிக்க மாட்டோம் ,ஆத்தா அடிக்கும்னு அடம்பிடிச்சிருக்காங்க, ச்சே இளைய சமூகத்துக்கே பெருத்த அவமானம்! இதே நம்ம பயப்புள்ளைகளா இருந்தா "மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்னு ஒன்னுமண்ணா கொண்டாட்டத்தில் அய்க்கியமாகி இருப்பாங்க :-))

ஆனாலும் உல்லாச கடமை தவறாத உ.பி. காவலர்கள் அடிச்சு குடிக்க வச்சிருக்காங்க, ச்சே என்ன ஒரு நல்ல மனசு ,நம்ம ஊருலவும் தான் இருக்காங்களே காவலர்கள் ,நான் காசுக்கொடுத்து தீர்த்தம் சாப்பிட்டு வந்தாலும், வழியில நிப்பாட்டி, ஊது ,வாய தொறனு சொல்லி வாயில கூட டார்ச் அடிச்சு டார்ச்சர் செய்றாங்கய்யா அவ்வ்!

காவல் துறை உங்கள் நண்பன்! என தமிழ்நாட்டில் சொல்லி வாயாலே வடை சுடும் நிலையில், நடைமுறையில் செய்துக்காட்டிய உ.பிக்காவலர்களின் நல்ல எண்ணம் புரியாத "பாப்பரசி" மீடியாக்கள் ,காவலர்களின் குத்தாட்டத்தை எல்லாம் காணொளியாக எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டதால் , நல்லிதயம் படைத்த கருணை மிகு காவலர்கள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லதுக்கே காலமில்லையா, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்விளைய சமுதாயம் என சரக்கு ஈந்தோரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் கொடுஞ்சமூகத்தினை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

அய்யகோ என்ன கொடுமை சார் இது!

செய்தி மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=678169

நன்றி!
------------------------

# அள்ளு அள்ளு ,தள்ளு தள்ளு!




படத்தில் காண்பது ,சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-45C ஆகும். இந்த இடம் பண்ருட்டி அருகே தென்ப்பெண்ணையாற்றின் அருகே இருக்கும் கண்டரக்கோட்டை(கண்டராதித்த சோழன் கோட்டை என்பதன் திரிபு) என்ற ஊருக்கு அருகில் உள்ளது .இன்னும் நான்கு வழியாக்கப்படவில்லை, அதற்கான டென்டர் விட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாச்சு. இப்போது இருப்பது இரட்டைவழிப்பாதை தான் , ஆனால் படத்தில் பார்த்தால் மாட்டுவண்டி போகும் மண்ப்பாதை போல இருக்கேனு நினைக்கலாம் ...ஹி ..ஹி உண்மையில மண்ப்பாதையே தான்.

 இங்கு தென்ப்பெண்ணையாற்றில் அரசு மணல் அள்ளும் மையம் செயல்படுகிறது , ஆற்றில் இருந்து மணல் அள்ளி அருகே கரையோரம் கொட்டி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். இவ்வாறு தினசரி பல நூறு லாரிகள் இரவும் பகலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக மணல் லோடுடன் இப்பகுதியில் சாலையில் ஏறி இறங்குவதால் இப்பகுதியில் சில நூறு மீட்டர்களுக்கு சாலையே காணாமல் போயிடுச்சு, அவ்வப்போது மண்ணள்ளி போட்டு நிரவி விட்டுவிடுகிறார்கள். அப்படியான மண்சாலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

மழைக்காலத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும், வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடும், சிறிய ரக கார்கள் சிக்கி நின்றுவிடும்.  இதுக்குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை, எப்பொழுதுமே இவ்விடம் புழுதிப்பறக்கும் மண்சாலையாகவோ அல்லது சேற்றுவயலாகவோ தான் இருக்கிறது.

(மணல் குவாரியில் கர்ம சிரத்தையுடன் மண்ணள்ளுகிறார்கள்)

இங்கு கனரக வாகனங்கள்  இயங்குவது அரசுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது சாலையை அதிக எடை தாங்கும் வகையில் தரமாக போடலாம், அல்லது அளவுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றுவதை தடுக்கலாம், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை, பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் ,2020 இல் இந்தியா தான் வல்லரசு!

என்ன கொடுமை சார் இது!
----------------

பின்க்குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,தினமலர் இணைய தளங்கள்,நன்றி!
**********************