Sunday, January 12, 2014

ஆட்டையப் போடுறது!


( பலப்பேரு புக்கையே ஆட்டைய போட்டுறாங்க...அவ்வ்வ்!)


தற்போதெல்லாம் திரைப்படங்கள் வெளியான அன்றே அப்படத்தின் மூலம் எது என "மூலாதாரத்தில்" இருந்து தோண்டியெடுத்து வெட்ட வெளிச்சம் ஆக்கிவிடுகிறார்கள் வலைமகன்கள், இதெல்லாம் இணையமெனப்படும் வஸ்து பாமரனுக்கும் சல்லீசாக கிடைக்க ஆரம்பித்ததன் விளைவாகும். இதனால் பல போலி அறிவுசீவிகளுக்கு தான் பெருமிழப்பு எனலாம்.

இது போன்ற ஆட்டைய போடும் சமாச்சாரங்கள் எல்லாம் தற்கால கண்டுப்பிடிப்பல்ல, தமிழ்ச்சூழலுக்கு திரைப்படமென  ஒரு சமாச்சாரம் அறிமுகம் ஆனக்காலந்தொட்டே "ஆட்டைய போடும் கலாச்சாரம்" துவங்கிவிட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது,பல அயல்நாட்டுபடங்களை அப்படியே தமிழாக்கம் செய்து புத்தம் புதியபடமாக எடுப்பது,ஆங்கில நாவல்களை சுட்டு எடுப்பது என்று ஆரம்பித்தார்கள் அப்படியே கொஞ்சம் முன்னேறி தமிழில் வெளியான படைப்புகளையும் பதம் பார்த்துள்ளார்கள், சில சமயமங்களில் எழுத்தாளரை அழைத்து "ஸ்டோரி டிஸ்கஷன்" செய்து கதைய உருவிட்டு அனுப்பவும் செய்துள்ளார்கள், ஹி...ஹி பெரியவா  செய்தால் பெருமாள் செய்தாப்போலனு இக்கால டயரடக்கர்களும் அதே வழியை இன்னும் பின்ப்பற்றுகிறார்கள் என்பது தான் வேதனையான வேடிக்கை!!!

தமிழ்திரையுலகில் இப்படி உருவியெடுக்கும்(நோ டபுள்மீனிங்க்) வேலையை முதன் முதலில் கி.பி 1936 இல் தான் ஆரம்பித்தார்கள் என சொல்கிறார்கள், அப்போதைய புகழ்மிகு தமிழியக்குனரான அமெரிக்க ரிடர்ன் இயக்குனர் எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு திரைப்படம்மெடுப்பதற்காக கதை வேண்டுமெனகேட்டதால் , தயாரிப்புதரப்பு ,சிட்டி.சுந்தரராஜன் என்ற எழுத்தாளரை அழைத்து பேசியது,எழுத்தாளரும் அதுவரை வெளியாகாத புதிய கதை ஒன்றினை "பத்மா சாகசம்" எனப்பெயரிட்டு எழுதியளித்துள்ளார்.

கதைக்கு என சன்மானம் எதுவும் அளிக்கவில்லை,படம் தயாரிக்கும்போது கொடுப்பார்களாயிருக்கும் ,இப்போ தானே "டிஸ்கஷனே" நடக்குது அதுக்குள்ள "பணம் பற்றி"வாயத்தொறந்தால் வாய்ப்பளிக்காமல் போயிட்டால் என்ன செய்வது என எழுத்தாளரும் அப்போதைக்கு எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.

ஆனால் சிலநாட்களுக்கு பிறகு எழுத்தாளருக்கு தெரிவிக்கப்படாமலும் ,சன்மானம் அளிக்காமலும் படத்தயாரிப்பினை துவக்கிவிட்டார்கள்,இதனை தினமணியில் ஆசிரியர்/எழுதிக்கொண்டிருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் என்ற நண்பர் மூலம் அறிந்த, சிட்டி.சுந்தரராஜன் தனது படைப்பினை ஆட்டைய போட்டார்கள் என நிருபிக்க வழியில்லை என்பதால் மாற்று வழியாக அவரது கதையை தினமணியில் "பத்மா சாகசம்" என்ற தொடர்கதையாக வெளியிட செய்துவிட்டார்,திரைப்படம் வெளியாகும் முன்னரே கதை அச்சு ஊடகத்தில் வெளியானதால் "கதைக்கான" காப்புரிமை தானாகவே எழுத்தாளருக்கு வந்துவிடும்,எனவே சன்மானம் அளிக்காமல் ஏமாற்ற முடியாது.  ஆனால் பத்திரிக்கையில் வெளியான கதைக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பில்லாமல் போயிற்று,அதே வேளையில் வேறு சில காரணங்களால் படமும் பாதியிலேயே நின்றுப்போனது,இவ்வாறாக 1936 இல் முதல் ஆட்டையப்போடும் வேலை பாதியிலேயே தோல்வியடைந்துள்ளது அவ்வ்!

ஆனால் இக்கால திரைப்படைப்பாளிகள் "தொழில்முறை நேர்த்தியுடன்" ஆட்டையப்போடுவதில் விற்பன்னர்கள், எனவே வெற்றிகரமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இதில் வேறு "என்னைப்போல யாருக்கு படமெடுக்க தெரியும்" என்றவெட்டி பந்தாவுக்கும் குறைச்சலில்லை, இவனுங்களுக்கு மட்டும் வாயில்லைனா நாய் கவ்விட்டு போயிடும் :-))

தற்போதெல்லாம் ஒருவர் எழுதிய கதையை வெளியிடாமலே காப்புரிமை பெறலாம், அப்படி செய்ய மெனக்கெட முடியாது எனில் ஏதேனும் ஒரு ஊடகத்தில் வெளியானாலே காப்புரிமையின் கீழ் வந்துவிடும் ,ஏதேனும் ஒரு ஊடகம் என்பதில் "வலைப்பதிவுகளும்" அடக்கம்,எனவே வலைப்பதிவில் எழுதியதையும் அனுமதியில்லாமல் எடுத்தாள முடியாது- கூடாது,ஆனால் வலைப்பதிவர்கள் பலரே ஆட்டை மன்னர்கள் என்பது தான் மாபெரும் சோகம் அவ்வ்!

இந்த காப்புரிமை சட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஓட்டை என்னவெனில் "உள்ளடக்கத்திற்கு" மட்டுமே கற்பனை உழைப்பின் அளவுகோளின் படி காப்புரிமை உண்டாம், படைப்பின் தலைப்புக்கு காப்புரிமை இல்லை!!!

 ஒரு புகழ்ப்பெற்ற எழுத்தாளர் எழுதிய கதையினை  ஆட்டையப்போட்டால் தான் காப்புரிமையின் கீழ் வழக்கு போடலாம்,அக்கதையின் தலைப்பினை சுட்டு திரைப்படமாக எடுத்தால் காப்புரிமை கோரமுடியாது.

pkp.pic.
Image and video hosting by TinyPic

உதாரணமாக பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற ஒரு எழுத்தாளர் "தொட்டால் தொடரும்" என்றப்பெயரில் ஒரு கதை எழுதியிருக்காருனு வச்சுப்போம், "தொட்டால் தொடரும்" நாவல் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிடுச்சு என்பதால் அதற்கு காப்புரிமை இயல்பாகவே இருக்கு எனவே அக்கதைய ஆட்டைய போட்டால் வழக்கு தொடரலாம்,அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் பெருசா இழப்பீடுலாம் கிடைச்சிடாது என்பது தான் நம்ம நாட்டின் நிலை, இதற்கும் எடுத்துக்காட்டாக ஒரு உண்மை வழக்கும் இருக்கு, என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர் எழுதி தீபம் இதழில் வெளியான "வெறும் மண்" என்ற நாடகத்தின் மறுபிரதியாகவே அக்காலத்தில்வெற்றிகரமாக ஓடிய கே.பாலச்சந்தரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படம் இருந்தது,எனவே திரைப்படத்தின் மூலக்கதை  உரிமையாளரான என்.ஆர்.தாசன் ,இயக்குனர் பாலச்சந்தர் மீது கதை உரிமைக்காக வழக்கு தொடர்ந்ததில் ,10 ஆண்டுகள் இழத்தடிப்புக்கு பின் ,கதை திருட்டு நடைப்பெற்றதை  நீதி மன்றம் உறுதி செய்து வெறும் 1,000 ரூ தான் கே.பாலச்சந்தருக்கு அபராதம் விதித்ததாம் அவ்வ்!

கதைய ஆட்டைய போட்டதற்கு வழக்கு தொடர்ந்தால் பெயரளவிலாவது இழப்பீடு கிடைக்கும்,ஆனால் தலைப்பினை ஆட்டைய போட்டால் ஒன்னியும் பண்ணமுடியாது என்பதால் சர்வசாதாரணமாக பலரும் தலைப்புகளை சுட்டு கொண்டுதானிருக்கிறார்கள், அதாவது "தொட்டால் தொடரும்" என நாவலின் தலைப்பினை மட்டும் ஆட்டைய போட்டால் காப்புரிமை சட்டத்தின் படி வழக்கெல்லாம் போடமுடியாது! காப்புரிமை சட்டம் இம்புட்டு சோப்ளாங்கியாக இருந்தால் நம்ம படைப்பின் தலைப்பு நமக்கு சொந்தமில்லையா? அப்ப என்னதான் செய்ய என சிண்டை பிச்சுக்கிறிங்களா? ஹி...ஹி யாமிருக்க பயமேன்! அதற்கும் ஒரு வழி சொல்கிறேன்,

காப்புரிமை சட்டத்தின் படி "ஒரு புத்தகத்தின் தலைப்புக்கு" தான் காப்புரிமை கோரமுடியாது ஆனால் இரண்டுப்புத்தகத்தின் தலைப்புக்கு காப்புரிமை கோரமுடியும், அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக ஒரே தலைப்பில் வெளியாகும் புத்தகத்தொடர்களின் தலைப்புகளுக்கு "காப்புரிமை" செல்லும்!

ஹாரிப்பாட்டர் என்றப்பெயரில் தொடராக புத்தகங்கள் வெளியானதால் அப்பெயரை வேறு யாரும் பயன்ப்படுத்த முடியாது,மேலும் டிரேட்மார்க் ஆகவும் பதிவு செய்துள்ளார்கள். இந்தியில் ஹரிபுத்தர் என ஒரு திரைப்படத்தினை எடுக்க இருந்தார்கள், ஒரிஜினல் ஹாரிப்பாட்டர் தயாரிப்பாளர்கள் ,எங்க படம் டைட்டில் போலவே இருக்குனு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வந்தன,அப்புறம் படமே உருவாகாமல் ஏனோ நின்னுப்போச்சு.

எனவே இழப்பீடு கிடைக்குதோ இல்லையோ ,ஒருவரின் படைப்பின் தலைப்புக்கும் காப்புரிமை கிடைக்க வேண்டும் எனில் "பாகங்களாக" புத்தகங்களை வெளியிட்டாலே போதுமானது,ஏற்கனவே வெளியான தொட்டால் தொடரும் நாவல் போன்றவற்றிற்கு கூட இரண்டாம் பாகம் வெளியிட்டால் தலைப்பின் மீது காப்புரிமை கிடைத்துவிடும் ,எனவே பழைய படைப்பின் தலைப்பு போயிடுமோ என்றெல்லாம் யாரும் அச்சப்படத்தேவையில்லை.

இதே போல இன்னொரு வகையிலும் தலைப்புக்கு காப்புரிமை பெறலாம், தலைப்பினை வணிக முத்திரையாக/சின்னமாக (டிரேட் மார்க்) பதிவு செய்துக்கொள்வது.இதனை மேல் நாட்டில் சகஜமாக செய்கிறார்கள், ஸ்பைடர்மேன், பேட் மேன்,சூப்பர்மேன் ஆகிய பெயர்கள்,உடை,லோகோ எல்லாமே "டிரேட்மார்க்" ஆக  மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டவை. படத்தின் டைட்டில் ஓடும் போது இதற்கான அறிவிப்பினை போடுவதை பலர் கண்டிருக்க கூடும்.

# ஆட்டைக்கு மரியாதை!

இது போன்ற ஆட்டையப்போடும் வேலைகளை சின்னவர்,பெரியவர் வித்தியாசமில்லாமல் கலையுலகில் பலரும் செய்துக்கொண்டு தானுள்ளார்கள்,ஆனால் பல சம்பவங்கள் அதிகம் அறியப்படாமலே போய்விடுகிறது, அப்படியான இரு சம்பவங்கள் அதுவும் ஒரே படைப்பாளிக்கு நேர்ந்திருக்கிறது என்றால் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என அனிச்சையாக சந்தேகப்ப்படவே தோன்றுகிறது!

திருப்பூரை சேர்ந்த சுப்ரபாரதி மணியன்(ஆர்.பி.சுப்பிரமணியன்) என்ற எழுத்தாளர் சாகித்ய அகதமி விருது உட்பட பலவிருதுகளை வென்றவர் ஆவார்.சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் தீபம் இதழில் வெளியான அவரின் "கவுண்டர் கிளப்" என்ற குறுநாவலின் அடிப்படையிலே பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "முதல்மரியாதை" திரைப்படம் இருப்பதாக கருதிய எழுத்தாளர் ,வழக்கறிஞர் நோட்டீசை இயக்குனர் பாரதிராஜாவுக்கு அனுப்பினாராம், இரு முறை நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டதாம்,மூன்றாவது முறை சுப்ரபாரதிமணியன் என்பவருக்காக ஏன் ஆர்.பி.சுப்ரமணியன் ஆகிய நீங்கள் வழக்கு போடவேண்டும், உங்களுக்கும் அக்கதைக்கும் என்ன சம்பந்தம் என பதில் நோட்டீசு வந்துச்சாம் அவ்வ்!

அப்பொழுது தான் "அபூர்வ ராகங்கள்" படவிவகாரத்தில் அனுபவப்பட்ட எழுத்தாளர் "என்.ஆர்.தாசனை" சந்தித்துள்ளார் சுப்ரபாரதி மணியன், வழக்கு தொடர்ந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வாய்தாவிலே ஓடும் அப்படியும் விடாமல் வழக்கு நடத்தினால் ஆயிரம் ரூவாத்தான் இழப்பீடு என சொன்னதும், வழக்கவே வேண்டாம்டா சாமினு கை கழுவிட்டாராம்!

# காஞ்சீவரப்"பட்டு".

ஒரு முறை அறியாமல் சிக்கிய எழுத்தாளர் அதோடு சும்மா இல்லை பின்னர் இன்னொரு முறை தெரிந்தே ஒரு சினிமாக்காரருக்கு கதை எழுதிக்கொடுத்துட்டு ஏமாந்திருக்கார், அதோடு இல்லாமல் மூன்றாவதாகவும் ஒரு கதைய இன்னொரு இயக்குனரிடம் கொடுத்திருக்காராம் அவ்வ்.

ஒரு முறை அவரை சந்திக்க வந்த ஒரு புகழ்ப்பெற்ற "ஒளிஓவிய" ஒளிப்பதிவாளர் ,எழுத்தாளரின் "சாயத்திரை" என்ற  நாவல் நன்றாக உள்ளதாகவும் அதனை அவரே திரைப்படமாக்க விரும்புவதாகவும் சொல்லவே , ஒளி ஓவியருடன் சென்னைக்கு சென்று "சாயத்திரைக்கு" திரைக்கதை அமைக்க முயன்றுள்ளார், இறுதியில் சாயத்திரைக்கதை சினிமாவுக்கு ஏற்ப எளிதாக இல்லை,வேற கதை சொல்லுங்க எனகேட்கவும் இன்னொரு புதிய கதையினை "பட்டு" என்ற பெயரில் முழுமையாக திரைக்கதையாக்கி அளித்துள்ளார், கதை பிரமாதம் படமாக்கிடலாம் என ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியவர் ,பின்னர் அப்படியே விட்டுவிட்டு வேறுசில படங்களில் பிசியாகிவிட்டாராம், சில ஆண்டுகளுக்கு பின்னர் எழுத்தாளர் "காஞ்சிவரம்" என்ற தேசிய விருது வென்ற படத்தினை பார்த்திருக்கிறார், அப்படத்தின் கதை கிட்டத்தட்ட முன்னர் ஒளிஓவியரிடம் அளித்த "பட்டு" கதையாம், விசாரித்த போது ஓளி ஓவியர் பலரிடமும் "பட்டு" திரைக்கதையினை அளித்து படமாக்க உதவ கேட்டிருந்தாராம், அவர்களில் யாரோ "களவாடி" இருக்கலாம் என சொல்லிவிட்டார்களாம்!

மேற்படி இரு சம்பவங்கள் குறித்தும் சுப்ரபாரதி மணியன்,தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

சுட்டி:

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html


இப்படிலாம் ஆட்டைய போட்டால்  படைப்பாளிக்கு என்ன தான் மரியாதை அவனுக்கு படைப்பூக்கம் எப்படி வரும்னு "ரொம்ப நல்லவங்க" எல்லாம் வருத்தப்படக்கூடும், அவர்களுக்கு ஏதோ என்னால் ஆன ஒரு சின்ன ஆலோசனை என்னவெனில்,

# அச்சு ஊடகமோ அல்லது மின் ஊடகமோ ஏதோ ஒன்றில் வெளியாக செய்துவிட வேண்டும்,குறைந்த பட்சம் நமது படைப்பு என அடையாளங்காட்ட உதவும்.

#அதான் படைப்புகள் வெளியானால் தான் ஆட்டைய போடுறாங்களே எனவே வெளியிடாமலே காப்புரிமை பெற என்ன செய்ய வேண்டும் என்றால் அதற்குமொரு வழி இருக்கு,

ரெஜிஸ்ட்ரார் ஆப் காப்பிரைட்ஸ் என ஒருவர் இருக்கிறார்,அவர் தான் இந்திய அளவில் அனைத்து கற்பனை படைப்புகளுக்கும் காப்புரிமை வழங்கும் வேலையை செய்கிறார்,

அவருக்கு ஒரு விண்ணப்பத்துடன் கற்பனை படைப்பாக்கங்களின் வகைக்கு ஏற்ப குறிப்பிடப்பட்ட கட்டணத்தினை வரைவோலையாலையாக இணைத்து அதனுடன் நமது  படைப்பின் இரு பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும், நமது/தங்களது படைப்பு "சுத்தமான அக்மார்க் " சுய உருவாக்கமா என ஆய்வு செய்துவிட்டு ,மேற்கண்ட படைப்புக்கு காப்புரிமை அளிக்கப்பட இருக்கிறது என ஒரு அறிவிப்பும் வெளியிடுவார்கள்,30 நாட்களுக்குள் எதிர்ப்பு அல்லது மறுப்பு வரவில்லை எனில் விண்ணப்பித்தவருக்கு காப்புரிமை அளிக்கப்படும், ஒரு பிரதியினை மூடி முத்திரையிட்டு பாதுகாப்பகத்தில் வைத்துவிட்டு ,இன்னொரு பிரதியில் "காபி ரைட் புரெக்டெட்" என முத்திரையிட்டு நமக்கு அனுப்பிவிடுவார்கள்,அதுவே நமக்கான ஆவணம் மேலும் முத்திரையிடப்பட்ட பிரதியை காட்டி "வணிக பேரங்கள்" பேசுவதும் எளிதானது மற்றும் பாதுகாப்பானதும் ஆகும்.

fee pic.

cp1


For fee detailes visit to,

http://copyright.gov.in/frmFeeDetailsShow.aspx


# என்ன வகையான "கற்பனை படைப்புகளுக்கு" காப்புரிமை கோரலாம்?

ஒலிப்பதிவு, ஒளி&ஒலி பதிவு, விரிவுரை காணொளிப்பதிவு, திரைப்படம்,ஓவியம்,சிற்பம்,எழுத்திலக்கியமென அனைத்திற்கும் காப்புரிமை கோரலாம்.

ஆனால் ஒரு வாக்கியம், சொற்றொடர், ஒரு எண்ணம்(ஐடியா), கண்டுப்பிடிப்பு போன்றவற்றிற்கு காப்புரிமை அலுவலத்தில் கோரமுடியாது, அவற்றினை பேடட்ண்ட் அலுவகலத்தில் அல்லது டிரேட் மார்க் அலுவலகத்தில் பதிவு செய்ய முயல வேண்டும்.

#ஒரு முறை காப்புரிமை செய்யப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு காப்புரிமை இருக்கும்,அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டும்.

#அதிக பட்சம் 75 ஆண்டுகள் வரையே காப்புரிமையினை ஒருவர் தக்க வைத்துக்கொள்ள முடியும்,அதன் பின்னர் காப்புரிமை தானாகவே நீங்கிவிடும்.

# உலக காப்புரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி , கி.பி 1923க்கு முன்னால் உருவான அனைத்து படைப்புகளுக்குமான காப்புரிமை நீக்கப்பட்டாயிற்று,எனவே அக்கால படைப்புகள் எல்லாம் "திற மூல படைப்புகள்" ஆகிவிட்டன.

எனவே தான் இன்டெர்நெட் ஆர்கைவ்ஸ், கூகிள் போன்றவை பல பழைய நூல்களை பிடிஎஃப் வடிவில் மென்னூல்களாக மாற்றி இலவசமாக அளிக்கின்றன.

#  படைப்பாளிஒருவர் நேரடியாகவோ அல்லது ஒரு பிரதிநிதி வழியாகவோ காப்புரிமையினை பெற விண்ணப்பிக்கலாம், தற்சமயம் இணைய தளம்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்,

மேலும் விவரங்களுக்கு,

http://copyright.gov.in

மேற்கண்ட தளத்தில் ,அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கமானகையேடு, மற்றும் காப்பி ரைட் சட்டம் மற்றும் திருத்தம் ஆகியன இலவசமாக தரவிறக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

கேட்பது உரிமை,கொடுப்பது கடமை!

ஹி...ஹி எதாவது பஞ்சு டயலாக் சொல்லி முடிச்சாத்தான் ஒரு ஃபினிஷிங்க்  டச் கிடைக்கும்னு ...அது...!
-----------------------------

பின்குறிப்பு:

# பொது மக்கள்,படைப்பாளிகள் மற்றும் சமூகத்தினர் நலங்கருதி விழிப்புணர்விற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

# பிழை திருத்தம் செய்யப்படவில்லை,விரைவில் பிழை திருத்தம் செய்யப்படும் அதுகாறும் பிழைகளுக்கு பொருத்தருள்க!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://copyright.gov.in/frmFAQ.aspx

# http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html

# http://madrasmusings.com/Vol%2021%20No%206/early-modern-tamil-novels.html

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------------------